அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுகள் காரணமாக எரிபொருளுக்கான வரியை குறைத்து சாதாரண மக்களுக்கு நிவாரணத்தை வழங்க அவுஸ்திரேலிய சமஷ்டி அரசாாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2022-23 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒரு லீற்றர் எரிபொருளுக்கு விதிக்கப்பட்டு வந்த 44 சதம் என்ற வரி 22 சதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒரு லீற்றர் எரிபொருளின் விலை இலங்கை ரூபாவின் பெறுமதியில் சுமார் 48 ரூபாவில் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டு வாகனங்களை கொண்டுள்ள குடும்பம் ஒன்றுக்கு ஆறு மாத காலத்திற்கு 700 அவுஸ்திரேலிய டெலர்கள் மீதமாகும்.
இது இலங்கை ரூபாயின் பெறுமதியில் இருந்து ஒரு லட்சத்து 54 ஆயிரம் ரூபாயாகும். உலகில் எரிபொருள் நெருக்கடி காணப்பட்டாலும் மக்களுக்கு நிவாரணத்தை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில், அரசாங்கத்தின் வரி வருவாயை குறைத்துக்கொண்டு அந்த தீர்மானத்தை எடுத்ததாக அவுஸ்திரேலிய அரசாங்கம் கூறியுள்ளது.
எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியில் கிடைக்கும் வருமானத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் வீதி அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறது.
நிலவும் நிலைமையின் அடிப்படையில் வீதி அபிவிருத்தியை விட மக்களுக்கு நிவாரணத்தை வழங்க வேண்டும் என்ற தேவை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.