
ஏறக்குறைய 45 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து, கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருப்பவர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும். தற்போது வரை இருவருமே சினிமாவில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடத்து வருகின்றனர்.
ரஜினிகாந்த், அண்ணாத்த படத்தில் நடித்து முடித்து விட்டு அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ள தலைவர் 169 படத்திற்காக தயாராகி வருகிறார். இேதே போல் கமல்ஹாசன், விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. பல காலமாக நெருங்கிய நண்பர்களாக இருக்கும் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் சந்தித்து கொள்வது அரிதாக நடந்தாலும், அவர்களின் சந்திப்பு தலைப்பு செய்தியாகவே பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் ரஜினிகாந்தை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்துள்ளார் கமல்ஹாசன். அவருடன் விக்ரம் படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் மகேந்திரன் ஆகியோரும் சென்றுள்ளனர். இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். 45 ஆண்டுகளுக்கு முன் ரஜினியும் – கமலும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், தற்போதைய புகைப்படத்தையும் இணைத்து வெளியிட்டு, புகழ்ந்து வருகின்றனர் ரசிகர்கள்.