குரங்கம்மையால் உலக அளவில் பொதுச் சுகாதாரத்திற்கு மிதமான அளவு ஆபத்து உள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் அது மனிதர்களுக்கிடையே அதிகம் பரவக்கூடிய கிருமியாக உருமாறி, கடுமையாக நோய்வாய்ப்படக்கூடியோரைத் தாக்கினால் பொதுச் சுகாதார அபாயம் அதிகரிக்கலாம் என்று அது கூறியது.
இதுவரை குரங்கம்மை நிரந்தர நோயாகக் கருதப்படாத 23 நாடுகளில் 257 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அது நிரந்தர நோயாகக் கருதப்படாத நாடுகளில் திடீரென ஒரே சமயத்தில் குரங்கம்மைச் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அதற்குக் காரணம் அது சில காலமாகவே கண்டறியப்படாமல் பரவிக்கொண்டு இருந்திருக்கலாம் என்றும் அண்மையில் நடந்த நிகழ்வுகளில் அதன் பரவல் அதிகரித்திருக்கலாம் என்றும் நிறுவனம் கூறியது.
குரங்கம்மைச் சம்பவங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது.
இதுவரை பெரும்பாலான சம்பவங்கள் பிரிட்டன், ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளன.