
இந்திய திரையுலகின் பலமொழிகளிலும் பிரபலமான பாடகராக இருப்பவர்களில் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத்தும் ஒருவர். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளில் இவர் பல பாடல்கள் பாடி உள்ளார்.
கேரளாவை சேர்ந்த 53 வயதான பாடகர் கேகே, தமிழ் சினிமாவில் 50 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். சினிமாவில் அறிமுகமாவதற்கு முன் 3500 விளம்பரங்களுக்கு பாடல்கள் பாடி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த மின்சார கனவு படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார். பிரபலமான பல பாடல்களை இவர் பாடி உள்ளார்.
கோல்கத்தாவின் நஸ்ருல் மஞ்சா பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கேகே பாடிக் கொண்டிருந்தார். கச்சேரி முடிந்ததும் மயங்கி விழுந்த கேகே உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பாடகரின் இந்த திடீர் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியும், சோகமும் அடைய வைத்துள்ளது. கேகே.,வின் திடீர் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, இந்திய திரையுலகினர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கேரள பாடகர் எடவா பஷீர் மேடையில் பாடிக் கொண்டிருந்த போதே உயிரிழந்த இரண்டு நாட்களிலேயே அதே போல் பாடகர் கேகே.,வும் உயிரிழந்துள்ளார். அடுத்தடுத்து பாடகர்கள் மேடையில், மாரடைப்பால் உயிர் விடுவது இந்திய திரையுலகையே அதிர வைத்துள்ளது.