வங்கதேசம் நாட்டை சேர்ந்த கிருஷ்ணா மண்டல் என்ற 22 வயது இளம்பெண், இந்தியாவை சேர்ந்த ஆஷிக் மண்டல் என்பவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. சில நாட்களில் இந்த நட்பு, காதலாக மாறி உள்ளது. ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். ஆனால் கிருஷ்ணா மண்டேலிடம் பாஸ்போர்ட் இல்லாததால் அவரால் இந்தியாவிற்கு வர முடியவில்லை.
காதலனை திருமணம் செய்ய முடியாமல் கவலையில் இருந்த கிருஷ்ணா மண்டல், வங்கதேசத்தில் இருந்து ஆற்றில் நீந்தியே இந்தியாவிற்கு வர முடிவு செய்துள்ளார். இதனால் சுந்தரவன காடுகள் வழியாக கங்கை நதியை கடந்து இந்தியாவிற்குள் வர திட்டமிட்டு, துணிச்சலாக பயணத்தை துவங்கி உள்ளார். புலிகள் அதிகம் காணப்படும் சுந்தரவனக் காடுகளை கடந்து, ஒரு மணி நேரம் கங்கை ஆற்றில் நீந்தி இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார் கிருஷ்ணா.
ஆற்றில் நீந்தியே இந்தியா வந்த கிருஷ்ணாவை, கோல்கத்தா காளிகாத் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார் ஆஷிக். இந்த சமயத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் அத்துமீறி இந்தியாவிற்குள் நுழைந்ததாக போலீசார், கிருஷ்ணாவை கைது செய்து அழைத்து சென்றனர். அவரை வங்கதேச அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக போலீசார் கூறி வருகின்றனர்.
காதலனை திருமணம் செய்வதற்காக கஷ்டப்பட்டு, ஆற்றில் நீந்தியே இந்தியா வந்த இளம்பெண்ணை, திருமணம் முடிந்த கையோடு போலீசாரால் கைது செய்யப்பட்டு, மீண்டும் வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்ப ஏற்பாடுகள் நடந்து வருவதால் காதலன் ஆஷிக் கவலையில் மூழ்கி உள்ளார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.