“ரஜினியுடன் இணைந்து நடிக்க எப்போதும் தயார்” – நடிகர் கமல்ஹாசன்

0
394

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை பத்திரிகையாளர்களுடன் படக்குழுவினர் இன்று பகிர்ந்து கொண்டனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியின்போது, நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “விக்ரம் திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்தவர்கள் ஊடகமும் மக்களும்தான். இவ்வளவு பெரிய வெற்றி சந்தோஷத்தை கடந்து பயத்தைக் கொடுக்கிறது. இன்னும் கடமையுடன் பணியாற்ற வேண்டும் என்ற பொறுப்பையும் இருக்கிறது. கூடிய விரைவில் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும். போதை பொருள் இல்லாத சமூகம் வேண்டும் என்ற சிறு விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்பதால் தான் அனைத்து படங்களிலும் அது தொடர்பான ஒரு சில காட்சிகள் வைத்து வருகிறேன். போதைப் பொருள் இல்லாத சமூகம் அமைக்கப்பட வேண்டும் என்று கமல் சார் போன்ற உச்ச நட்சத்திரங்கள் மூலம் பேசும்போது அது தாக்கத்தை ஏற்படுத்தும். அதை உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

சந்திப்பின்போது நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், “விக்ரம் -2 படத்திற்கு நாடு தழுவிய பாராட்டு கிடைத்ததில் மகிழ்ச்சி. நன்றி என்பதை தவிர சொல்வதற்கு வேறொன்றும் இல்லை. இதற்கு முன்பு கூட நிறைய வெற்றி கிடைத்துள்ளது. இருப்பினும் இது இந்திய படமொன்று வெற்றி கொள்வதாக தான் பார்க்கிறேன். அதற்காக தற்போது கிடைத்துவிட்டது போதும் என்று நாங்கள் நினைக்கவில்லை. சிரத்தை இல்லாமல் எதையும் செய்ய கூடாது என்று நினைப்பவன் நான். ரஜினியுடன் இணைந்து எப்போதும் நடிக்க தயாராகவே உள்ளேன். மக்கள் நீதி மையம் என்ற குழந்தை நன்றாக வளர்ந்ததுள்ளது. 5 வயது ஆகிறது” என்றார்.

Previous articleநயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்தது…ரஜினி, ஷாருக்கான் நேரில் வாழ்த்து
Next articleஇந்தியாவின் முதல் ‘சோலோகாமி’ திருமணம்.. தன்னைத்தானே மணமுடித்த குஜராத் இளம்பெண்