
நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் சமீபத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, தேதியையும் அறிவித்தனர்.
ஜுன் 3 ம் தேதி திருப்பதியில் நடக்கும் என முதலில் அறிவிக்கப்பட்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் பிறகு மாமல்லபுரத்திற்கு மாற்றப்பட்டது. தனியார் விடுதியில் மிக பிரம்மாண்டமாக இவர்களின் திருமண ஏற்பாடுகள் நடத்தப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.
பலத்த பாதுகாப்பு, பல கட்டுப்பாடுகளுடன் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று நடைபெற்றது. இந்து பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய், கார்த்தி, விஜய் சேதுபதி, சரத்குமார், டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக்குமார், மணிரத்னம், ஹரி, சிறுத்தை சிவா, ஷாலினி அஜித்குமார், சரண்யா பொன்வண்ணன், தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.





நயன்தாரா– விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு 27 வகையான உணவுகள் விருந்தாக வழங்கப்பட்டது. இவர்களின் திருமணத்தை முன்னிட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆதரவற்றவர்களுக்கு பகல் உணவு வழங்கப்பட்டது. இந்த திருமண விழாவின் புகைப்படங்கள் பிற்பகலிலேயே வெளியிடப்பட்டன. சமூக வலைதளங்களில் ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணத்தை கூகுளில் அதிகமானவர்கள் தேடி உள்ளனர். அதிலும் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் பற்றிய தலைப்பை தான் அதிகமானவர்கள் தேடி உள்ளனர்.