கடந்த 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியான விக்ரம் திரைப்படம் முதல் வாரத்தை கடந்து 2வது வாரத்தில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இருப்பினும், ரசிகர்கள் கூட்டம் குறையாததால், மற்ற படங்களை திரையிட்ட தியேட்டர்கள் அவற்றை நீக்கி விட்டு விக்ரம் படத்தை திரையிட்டு வருகின்றன.
வெற்றியைத் தொடர்ந்து மற்ற மொழிகளிலும் விக்ரம் படம் ரீமேக் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. நேற்று முன்தினம் கமல் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜை தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது விக்ரம் படங்களை ரீமேக் செய்வது குறித்து பேசப்பட்டது. இந்நிலையில் தமிழில் உருவாக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படங்களின் வெளியீட்டு தேதி ஒத்தி வைக்கப்படலாம் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறிப்பாக அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான யானை திரைப்படம் வரும் 17-ம்தேதி வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விக்ரம் படத்திற்கு வார நாட்களிலும் நல்ல கூட்டம் இருப்பதால், இதனை கவனத்தில் கொண்டு வெளியீட்டை தள்ளி வைக்க யானை படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று மற்ற சில பெரிய பட்ஜெட் படங்களின் வெளியீடும் ஒத்தி வைக்கப்படும் என கோலிவுட்டில் பேசப்படுகிறது.
விக்ரம் படத்தைப் பொருத்தளவில் உலகம் முழுவதும் ரூ. 300 கோடி அளவுக்கு வசூலை எட்டி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வாரமும் படம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடும் என்பதால் ஒட்டுமொத்தமாக ரூ. 500 கோடியை இந்த படம் வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.