பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உளவு பார்க்க அவரது வீட்டில் உளவு கருவி பொருத்த முயற்சி நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் – தெரிக் – இ – இன்சாப் கட்சியின் தலைவரும் அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் வசிக்கும் இஸ்லாமாபாத் இல்லத்தில் பணியாற்றும் ஊழியர் இம்ரான் கானின் பெட்ரூமில் இந்த ஸ்பை கருவியை பொருத்த திட்டமிட்டுள்ளார். அப்போது அவர் கையும் களவுமாக பிடிபட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஷெபாஸ் கில் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இதே போன்று பனி காலா என்ற மற்றொரு இடத்திலும் இம்ரான் கானை உளவு பார்க்க கருவி பொருத்த முயற்சி நடைபெற்ற போது அவரது தனி பாதுகாப்பு படையினர் அந்த நபரை தடுத்து நிறுத்தி காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.இது மிகவும் ஆபத்தான போக்கு. இது போன்ற செயல்களை செய்வதை எனது எதிர் தரப்பினர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அவர் பிரதமர் பதவியில் இருந்து இறக்கப்பட்டார். இதையடுத்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அமைக்கப்பட்ட ஆட்சியில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரிப் புதிய பிரதமராக தேர்வானார். தனது ஆட்சி அந்நிய சக்திகளின் சதியால் கவிழ்க்கப்பட்டது என தொடர்ந்து கூறி வரும் இம்ரான் கான் நாடு முழுவதும் மக்களை சந்தித்து கூட்டம் நடத்தி ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்நிலையில், கடந்த மாதம் சியால்கோட் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், தன்னை சுட்டுக்கொல்ல சதிவேலை நடப்பதாகவும் பகீர் புகார் அளித்துள்ளார். இதன் பின்னணியில் பாகிஸ்தான் நாட்டினர் மட்டுமல்லாது வேறு நாட்டைச் சேர்ந்தவர்களும் உள்ளனர் என இம்ரான் கான் கூறியுள்ளார். தங்கள் கட்சி தலைவருக்கு ஏதேனும் நேர்ந்தால் அது பாகிஸ்தான் நாட்டின் மீதே நடத்தப்படும் தாக்குதலாக கருதி எதிர்வினை ஆற்றப்படும் என இம்ரான் கானின் பிடிஐ கட்சி தெரிவித்துள்ளது.