உக்ரைன் மீது போர்த்தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு பதிலடி தரும் வகையில் அந்நாடு மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் விளைவாக, ரஷ்யா கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. 104 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முதன்முறையாக அந்நிய செலாவணி சிக்கலில் ரஷ்யா சிக்கியுள்ளது. வெளிநாட்டு கடன்கள் உள்ளிட்ட பணங்களை திரும்பச் செலுத்த முடியாமல் திவால் நிலையை அந்நாடு எட்டியுள்ளது.
முன்னதாக, கடந்த 1998ஆம் ஆண்டு ரஷ்யாவின் கரன்சி சரிவு ஏற்பட்டு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியபோது, அப்போதைய அதிபர் போரிஸ் யெல்ட்சின் அரசு உள்ளூர் கடனில் 40 பில்லியன் டாலர் அளவிற்கு செலுத்த தவறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து தங்கம் இறக்குமதியை தடை செய்ய ஜி 7 நாடுகள் முடிவு செய்துள்ளன. இத்தகவலை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
ஜெர்மனியில் நடந்து வரும் ஜி 7 எனப்படும் வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. எரிபொருளுக்கு அடுத்தபடியாக தங்கத்தைத்தான் ரஷ்யா அதிகளவில் ஏற்றுமதி செய்து பெருமளவில் அந்நியச்செலாவணியை ஈட்டி வருகிறது. ரஷ்ய தங்கத்திற்கு தடை விதிப்பது மூலம் அந்நாட்டு பொருளாதாரத்தை மேலும் முடக்க அமெரிக்கா உள்ளிட்ட ஜி 7 நாடுகள் திட்டமிட்டுள்ளன.
ரஷ்ய எரிபொருளுக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ள நிலையில் அடுத்து தங்கத்திற்கும் தடை விதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ரஷ்யாவுக்கு தங்கத்தின் மீதான தடை பேரிடியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.