மணிப்பூரில் பயங்கர நிலச்சரிவு – 20க்கும் மேற்பட்டோர் பலி, பலர் மாயம்

0
245

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 20க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் மேற்கு பகுதியில் உள்ள நோனி என்ற மாவட்டத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இங்கு, ஜிரிபாம்-இம்பால் பகுதியில் புதிய ரயில்வே திட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், துபுல் என்ற ரயில்நிலையம் அருகே தான் இந்த நிலச்சரிவு நிகழ்ந்துள்ளது. ரயில்வே கட்டுமானப் பணியில் 50க்கும் மேற்பட்டோர் இங்கு வேலை செய்து வந்துள்ளனர். திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள நபர்களை மீட்கும் பணிகளை பேரிடரால் மேலாண்மை குழு மேற்கொண்டு வருகிறது.

மேலும் இந்த நிலச்சரிவானது அங்கு ஓடும் லேஜெய் என்ற நதிக்கு குறுக்கே ஏற்பட்டுள்ளதால், நதியின் ஓட்டம் தடைப்பட்டு தடுப்பணை போல் அப்பகுதி காணப்படுகிறது. எந்த நேரமும் இது தாழ்வான பகுதியில் வெள்ள பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால், அப்பகுதிக்கு அருகே சிறார்கள் யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் மக்கள் அனைவரும் உஷார் நிலையில் இருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘முதலமைச்சர் பிரேன் சிங்கிடம் தொடர்பு கொண்டு பேசினேன். மீட்பு பணிகளுக்கு மத்திய அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்ய தாயராக உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்றுள்ளார்.

மீட்பு நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்து வரும் மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங், அதிகாரிகளுடன் அவரச ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.காணாமல் போனவர்களை மீட்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள முதலமைச்சர், முதலுதவி சிகிச்சை உடனடியாக கிடைக்க டாக்கடர்களுடன் கூடிய அம்புலன்ஸை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளார்.

Previous articleஆஸ்திரேலிய டென்னிஸ் வீரரின் மோசமான செயல் – அபராதம் விதிக்க திட்டம்
Next articleஇரண்டரை ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக சீனாவை விட்டு வெளியே வந்த அதிபர் ஜி ஜிங்பிங்