”என் உடல் பலமாக இல்லைதான்; ஆனால் என் இதயம்..” – மனம் திறந்த நடிகை ஸ்ருதி ஹாசன்

0
288

திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் கமல் ஹாசனின் மகளும், நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட ஸ்ருதி ஹாசன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு PCOS பிரச்னை இருப்பது குறித்து பதிவிட்டிருக்கிறார்.

தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவுடன் இணைத்து தனக்கு இருக்கும் PCOS (polycystic ovary syndrome) மற்றும் endometriosis என்ற ஹார்மோனல் பிரச்னை இருப்பது தொடர்பாக விரிவாக குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவையும், பதிவையும் கண்ட நெட்டிசன்கள் ஸ்ருதி ஹாசனுக்கு வாழ்த்துகளையும் தங்களது ஆதரவையும் கூறி வருகிறார்கள்.

ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டதன் விவரம் பின்வருமாறு:

“மோசமான ஹார்மோனல் பிரச்னையில் இருந்து மீள்வதற்காக போராடி வருகிறேன். வளர்சிதை மாற்ற சவால்கள், வீக்கம், சமநிலையின்மை ஆகியவற்றுடன் போராடுவது கடினமானதுதான் என பெண்களால் நன்றாகவே அறிய முடியும்.

ஆனால் அதையே நினைத்துக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, எனக்கு வந்த இந்த உபாதையை ஏற்றுக் கொண்டு அதனுடன் சேர்ந்து நானும் போராட தொடங்கியிருக்கிறேன். அதற்காக முறையாக உணவை உண்டு, சரியாக தூங்கி, உற்சாகமாக உடற்பயிற்சி செய்வதற்காக எனக்கு நானே நன்றி கூறிக் கொள்கிறேன்.

என்னுடைய உடல்நிலை வேண்டுமானால் ஆரோக்கியமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் என் மனநிலை அப்படி இருக்கவில்லை. மகிழ்ச்சியான ஹார்மோன்கள் ஓடட்டும். இவையெல்லாம் ஏதோ நான் பிரசங்கம் செய்வது போல உங்களுக்கு தோன்றலாம். ஆனால், இந்த சவால்களை ஏற்று என்னை வரையறுத்து விடாமல் இருப்பதற்கான பயணமாக கருதுகிறேன். எனவே இதை உங்களிடம் பகிர்ந்துக்கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறது.” இவ்வாறு ஸ்ருதி ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ருதி தற்போது கே.ஜி.எஃப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீலின் இயக்கத்திலான பிரபாஸின் சலார் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் சாந்தனு ஹசாரிகா என்பவருடன் ரிலேசன்ஷிப்பில் இருந்து வருகிறார். அண்மையில் இந்தியா டுடே நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூட, சாந்தனு ஹசாரிகாவுடன் இருப்பது பெருமையாகவே இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

Previous articleசைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்
Next articleஅதிகரிக்கும் காலரா நோய் பரவல்.. காரைக்காலில் ஊரடங்கு