ஒரே வருடத்தில் இந்தியாவை துறந்து வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 1 லட்சம் இந்தியர்கள்

0
309

இந்திய நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாஜி ஃபஸ்லுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு, சென்ற ஆண்டில் மட்டும் சுமார் 1,63,000 இந்தியர்கள் இந்தியக் குடியுரிமையைத் துறந்துள்ளனர் என உள்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. இந்த 1,63,000 இந்தியர்களில் 78,284 நபர்கள் அமெரிக்காவிலும், 23,533 நபர்கள் ஆஸ்திரேலியாவிலும், 21,597 நபர்கள் கனடாவிலும், 14,637 இந்தியர்கள் இங்கிலாந்திலும் குடியுரிமை வாங்கியுள்ளனர்.

மேலும், 2020ல் பாகிஸ்தானில் 7 இந்தியர்கள் குடியுரிமை வாங்கியிருந்த நிலையில், இந்த ஆண்டு 41 இந்தியர்கள் பாகிஸ்தானில் குடியுரிமை வாங்கியுள்ளதாகப் புள்ளிவிவரங்களை வெளியிட்டது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம், “இது திடீரென அதிகமான எண்ணிக்கை அல்ல. 2020இல் பெருந்தொற்று காரணமாக மற்ற நாடுகளில் குடியுரிமை பெற முடியாதவர்கள் சென்ற ஆண்டு பெற்றுள்ளனர்” என விளக்கமளித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 103 நாடுகளில் இந்தியர்கள் குடியுரிமை வாங்கியுள்ளனர் எனவும் 2015 முதல் 2021 வரையில், 9,32,276 இந்தியர்கள், வேறு நாடுகளில் குடியுரிமை வாங்கியுள்ளனர் என ஏற்கனவே நாடாளுமன்றத்தில் புள்ளிவிவரத்தை வெளியிட்டு இருந்தது உள்துறை அமைச்சகம். கடந்த 2020ல் 17,093 இந்தியர்கள் கனடாவிலும், 13,518 நபர்கள் ஆஸ்திரேலியாவிலும் குடியுரிமை பெற்றுள்ளனர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதே நேரம், கடந்த நவம்பர் மாதம் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் 2016 முதல் 2020 வரை 10,645 பேர் இந்தியக் குடியுரிமைக்காக விண்ணப்பித்திருந்தனர் எனத் தெரிவித்திருந்தனர். இதில் 7782 நபர்கள் பாகிஸ்தானியர்கள் என்றும், 795 நபர்கள் ஆப்கான் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 4,177 பேருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது எனவும், விண்ணப்பித்திருந்த 452 அகதிகளில் இதுவரை எத்தனை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது எனத் தகவல் இல்லை எனவும் தெரிவித்தது.

Previous articleஇனி அலுவலகத்திலேயே குட்டி தூக்கம் போடலாம்… ஜப்பான் நிறுவனம் அசத்தல் கண்டுபிடிப்பு
Next articleஇலங்கையின் பொருளாதார மீட்சிக்கான முயற்சிக்கு தொடர்ந்து ஆதரவு – இந்தியா