கோத்தபய ராஜபக்சே 14 நாள் தங்க சிங்கப்பூர் அரசு அனுமதி

0
444

https://www.facebook.com/groups/1238440233362043/?ref=share

இலங்கையில் போராட்டக்காரர்களின் ஆவேசத்தை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினார். 13-ந் தேதி இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். அங்கு எதிர்ப்பு எழுந்ததால், சிங்கப்பூர் சென்றார். தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் தங்களிடம் தஞ்சம் கேட்கவில்லை என்றும், அவருக்கு தஞ்சம் அளிக்கப்படவில்லை என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் கடந்த வாரம் விளக்கம் அளித்தது. இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே பயணம் தொடர்பான பத்திரிகைகளின் கேள்விகளுக்கு சிங்கப்பூர் குடியேற்ற ஆணையம் நேற்று விளக்கம் அளித்தது. அந்த ஆணையம் கூறியிருப்பதாவது:- தனிப்பட்ட பயணமாக கோத்தபய ராஜபக்சே கடந்த 14-ந் தேதி சிங்கப்பூருக்கு வந்தவுடன் அவருக்கு 14 நாட்கள் தங்குவதற்கான குறுகிய கால அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது. பொதுவாக இலங்கையை சேர்ந்தவர்கள் சிங்கப்பூருக்கு வரும்போது, 30 நாள்வரை தங்குவதற்கான குறுகிய கால அனுமதிச்சீட்டு வழங்கப்படும் அதற்கு மேல் தங்குவதை நீட்டிக்க விரும்பினால், அவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டி இருக்கும். தகுதி அடிப்படையில் அவை தனித்தனியாக பரிசீலிக்கப்படும் என்று ஆணையம் கூறியுள்ளது.

இதற்கிடையே, சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கை மக்கள், இலங்கையில் இயல்புநிலை திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆட்சி மாற்றத்துடன் உறுதியான கொள்கை மாற்றமும் வர வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். சிலர் ஒருவேளை சாப்பாட்டை தியாகம் செய்து, அதற்கான பணத்தை சேமித்து, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி இலங்கைக்கு அனுப்பி வருகிறார்கள். இலங்கையில் பெட்ரோல் தட்டுப்பாட்டுக்கு சைக்கிள் பயன்படும் என்பதால், வேறு சிலர் சைக்கிள்களை கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வருகிறார்கள். நம்பகமான நபர்கள் மூலம் உதவி அனுப்புவதில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள்.

Previous articleசீனா வங்கியில் பணம் எடுக்க பொதுமக்களுக்கு தடை
Next articleதமிழ் தலைப்புகளை அறிமுகம் செய்யும் டிவிட்டர் – இது எப்படி இயங்கும்?