தமிழ் தலைப்புகளை அறிமுகம் செய்யும் டிவிட்டர் – இது எப்படி இயங்கும்?

0
516

https://www.facebook.com/groups/1238440233362043/?ref=share

ஆண்டிராய்ட், ஐஓஎஸ் இயங்கு தளங்களைக் கொண்ட ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் வெப் பயனாளர்களுக்காக 100 சதவீத தமிழ் தலைப்புகளை அறிமுகம் செய்வதாக டிவிட்டர் நிறுவனம் கடந்த புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. டிவிட்டரில் தமிழை தங்களின் முதன்மை மொழியாக தேர்வு செய்துள்ள பயனாளர்களுக்கு இந்த வசதி கிடைக்கும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

டிவிட்டர் தளத்தை இந்தியாவுக்கு தகுந்தாற்போல கட்டமைக்க வேண்டும் என்ற நோக்கம் மற்றும் நாட்டின் பன்முக, பல மொழி கலாச்சாரங்களைக் கொண்ட பயனாளர்களுக்கு சேவை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.டிவிட்டரில் தமிழை முதன்மை மொழியாக வைத்திருப்பவர்களுக்கு, தமிழ் இலக்கியம், இசை, கவிதை மற்றும் பல விஷயங்கள் தொடர்பான ஆர்வத்தை தூண்டுகின்ற விவாதங்களை கொண்டு சேர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 3ஆம் இடத்தில் தமிழ் இந்தியாவைப் பொருத்தவரையில் டிவிட்டரில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் மொழிகளில் தமிழ் 3ஆம் இடத்தில் இருக்கிறது. தமிழ் தலைப்புகளை டிவிட்டர் பயனாளர்கள் தேர்வு செய்யும்போது, தமிழ் மொழி சார்ந்த டிவிட்டர் பதிவுகள் மற்றும் விவாதங்கள் ஆகியவை அவர்களது டைம்லைனில் முன்னுரிமை அடிப்படையில் காண்பிக்கப்படும். உதாரணத்திற்கு நடிகர் ரஜினிகாந்த், விஜய், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அல்லது சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் என தமிழ் மொழியோடும், தமிழ் மண்ணோடும் தொடர்புடைய பதிவுகளை பார்வையாளர்கள் பார்வையிட முடியும்.

டிவிட்டரை வெகு விரைவாக உள்வாங்கிக் கொண்டவர்கள் தமிழ் வாடிக்கையாளர்கள் தமிழ் தலைப்புகள் அறிமுகம் செய்யப்படுவதற்கான காரணம் குறித்து டிவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து டிவிட்டர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் செரில் அன் கோடோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல ஆண்டுகளாக விசாலமான மற்றும் சம கால விவாதங்களை மேற்கொள்வதற்கான தளத்தை டிவிட்டர் நிறுவனம் வழங்கி வருகிறது. குறிப்பாக, ஒரே சிந்தனை கொண்டவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்னெடுக்கவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.அந்த வகையில், டிவிட்டர் தளத்தை வெகு விரைவாக உள்வாங்கிக் கொண்டு பயன்படுத்த தொடங்கியவர்கள் தமிழ் வாடிக்கையாளர்கள்.அவர்களது ஆர்வத்தை கொண்டாடும் வகையில், நாங்கள் #TamilSpaces என்ற எமோஜியை அறிமுகம் செய்துள்ளோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

டிவிட்டரில் தலைப்புகள் என்னும் வசதி முதன் முதலாக 2019ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதே ஆண்டில் ஹிந்தி மொழிக்குமான தலைப்பு தொடங்கப்பட்டது. தற்போதைய சூழலில் உலகெங்கிலும் 13 மொழிகளில் 15,000 தலைப்புகளை டிவிட்டர் நிறுவனம் நடத்தி வருகிறது. டிவிட்டரில் உள்ள 280 மில்லியன் பயனாளர்கள் இதில் ஏதேனும் ஒரு தலைப்பையாவது பின்பற்றி வருகின்றனர்.

Previous articleகோத்தபய ராஜபக்சே 14 நாள் தங்க சிங்கப்பூர் அரசு அனுமதி
Next articleவிக்டோரியா கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்ற தமிழ் வீரர்