இலங்கையில் அடுத்த வேளை உணவுக்கு நிச்சயமற்ற சூழலில் 60 லட்சம் பேர்…வேதனையான தகவல்

0
318

இலங்கையில் விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவற்றை தொடர்ந்து கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசுக்கு ஏற்பட்டு உள்ள நிதி நெருக்கடியால், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் ஆகியவற்றை இறக்குமதி செய்யவோ, விலை கொடுத்து வாங்கவோ முடியாத சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை இல்லாத வகையிலான எரிபொருள் பற்றாக்குறையால் அந்நாடு சிக்கி தவித்து வருகிறது. இந்த சூழலில், இலங்கைக்கு இந்தியா ஆதரவுகரம் நீட்டியுள்ளது. கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள், உரம், எரிபொருள் போன்றவற்றை தீவு நாடான இலங்கைக்கு கப்பலில் அனுப்பி வருகிறது. எனினும், இலங்கையில் நெருக்கடியான சூழல் நீடித்து வருகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஆளும் அரசின் மீது திரும்பியது. இதனால், சிங்கப்பூர் தப்பி சென்ற அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார். இடைக்கால அதிபராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கே பின்பு, சமீபத்திய தேர்தலில் அதிபராகி உள்ளார்.

எனினும், அரசுக்கு எதிரான தீவிர மக்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், இலங்கைக்கான ஐ.நா.வின் உலக உணவு அமைப்பின் இயக்குனர் அப்துர் ரகீம் சித்திக் செய்தியாளர்களிடம் கூறும்போது, தொடக்கக்கட்ட ஆய்வுகளின்படி நாட்டில் 63 லட்சம் பேருக்கு உணவு பாதுகாப்பின்மை உள்ளது என தெரிவித்து உள்ளார். சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை இல்லாத வகையில், இலங்கை பொருளாதாரம் ஆனது தற்போது உணவு நெருக்கடியில் சிக்கி மோசமடைந்த சூழலில் காணப்படுகிறது. அடுத்த இரு மாதங்களில், ஏற்கனவே திணற செய்யும் பணவீக்கம் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூன் வரையில், உணவு பணவீக்க விகிதம் 80 சதவீதத்திற்கும் கூடுதலாக உள்ளது என சித்திக் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், அவசரகால உணவு, ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கான உணவு ஆகியவற்றை பெற்று, 30 லட்சம் மக்களுக்கு வழங்குவதற்கு 6.3 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான தொகை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை கொண்டு நடப்பு ஆண்டு டிசம்பர் வரை உணவு தேவையை பூர்த்தி செய்ய முடிவானது. எனினும், அவற்றில் 30 சதவீதம் அளவுக்கே நிதியை திரட்ட முடிந்துள்ளது என தெரிவித்து உள்ளார். உணவு வழங்க உதவியாக, இலங்கைக்கு 6.3 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான தொகை அவசர தேவையாக உள்ளது என கூறியுள்ள அவர், உணவு பாதுகாப்பு என்பது அனைத்து நேரங்களிலும் அனைத்து மக்களுக்கும் போதிய ஊட்டச்சத்து உணவு கிடைப்பது என்பதே என்றும் சித்திக் சுட்டி காட்டியுள்ளார். ஆய்வு ஒன்றின்படி, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 4ல் ஒரு பங்கு மக்கள், என்னவெனில் 53 லட்சம் பேர் தங்களது உணவின் அளவை குறைத்து உள்ளனர். அல்லது உணவையே தவிர்த்து விடுகின்றனர். அல்லது தங்களது குடும்பத்தில் வளர்ந்து வரும் நிலையில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கு உணவை விட்டு விடுகின்றனர் என்ற வேதனையான தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Previous articleஇலங்கை அதிபர் மாளிகையில் இருந்து 1000 கலைப்பொருட்கள் மாயம்
Next articleபாலர் பள்ளித் தமிழாசிரியர்களுக்குரிய கலந்தாய்வரங்கம்