சிங்கப்பூரில் பதுங்கி இருக்கும் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சே, அமெரிக்கா ஆதரவுடன் சவுதி அரேபியாவில் தஞ்சமடைய இருப்பதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் மக்கள் புரட்சியால் பிரதமர் பதவியில் இருந்து முதலில் மகிந்த ராஜபக்சே விலகினார். பின்னர் ஜனாதிபதி பதவியை விட்டுவிட்டு கோத்தபாய ராஜபக்சே நாட்டை விட்டே தப்பி ஓடினார். இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு முதலில் தப்பி ஓடிய கோத்தபாய ராஜபக்சே, அங்கே கடும் எதிர்ப்பு கிளம்பியதால் சிங்கப்பூருக்குப் புறப்பட்டார். சிங்கப்பூரிலும் குறுகிய காலம் தான் தங்கி இருக்க அந்நாட்டு அரசு அனுமதித்தது. இதனால் சிங்கப்பூரை விட்டு வெளியேற வேண்டிய நெருக்கடியில் சிக்கியிருக்கிறார் கோத்தபாய ராஜபக்சே. சிங்கப்பூரில் இருந்து அமெரிக்கா செல்லத்தான் கோத்தபாய திட்டமிட்டிருந்தாராம். ஆனால் தற்போதைய நிலையில் அமெரிக்காவின் ஆதரவுடன் சவுதி அரேபியா செல்வது என முடிவு செய்திருப்பதாககோத்தபாய தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவும் இதனையே கோத்தபாயவுக்கு ஆலோசனையாக கொடுத்திருக்கிறதாம். இலங்கையின் புதிய ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கே இன்னமும் 2 ஆண்டுகள் பதவியில் இருப்பார். சிங்கப்பூரில் இருந்து சவுதி செல்லும் கோத்தபாய இலங்கையின் நிலைமைகள் சீரான பின்னர், கொழும்பு திரும்பக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.