இலங்கையை நெருக்கியுள்ள பொருளாதார சிக்கலுக்கு தீர்வு காணாத ஆட்சியாளர்களுக்கு எதிராக கடந்த 9-ந் தேதி மக்கள் புரட்சி வெடித்தது. நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகரில் குவிந்து, அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். பின்னர் அதிரடியாக புகுந்து சூறையாடிய அவர்கள், சில நாட்களாக மாளிகைக்குள்ளேயே தங்கினர். அங்கே உண்டு, குடித்து நாட்டின் அதிபர் வாசம் செய்யும் இடங்களை உறைவிடமாக்கிக்கொண்டனர். இதைப்போல பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகையையும் போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்து இருந்தனர். இது உலக அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்கள் எழுச்சியை ஆட்சியாளர்களுக்கு உணர்த்திய அவர்கள், பின்னர் தாங்களாகவே அங்கிருந்து வெளியேறினர். அதன் பின்னரே இலங்கை பாதுகாப்பு படையினரால் அதிபர் மற்றும் பிரதமர் அலுவலகங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுக்க முடிந்தது
இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் ஆய்வு நடத்தினர். இதில் அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பழங்கால கலைப்பொருட்கள் மாயமாகி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. மிகப்பெரும் கலைப்பொக்கிஷமாக கருதப்படும் இந்த பொருட்கள் விலை மதிப்பற்றவை ஆகும். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள இலங்கை அரசு மேற்படி பொருட்கள் மாயமானது குறித்து விசாரணை நடத்தவும், அவற்றை கண்டுபிடித்து மீட்கவும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உள்ளது. அந்த குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். ஆனால் இந்த பொருட்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஏனெனில் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் குறித்த சரியான ஆவணங்கள் தொல்லியல் துறையிடம் இல்லை. தொல்லியல் சிறப்பு வாய்ந்த இடமாக அதிபர் மாளிகை அறிவிக்கப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் அரசுடமையாக்கப்பட்டு இருந்தாலும், அதன் விவரங்கள் தொல்லியல் துறையிடம் இல்லாததால், அவற்றை மீட்டு வருவதில் சிக்கல் உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.