ஸ்மார்ட் வாட்ச் அணிவதால் உடல் எடையில் ஏற்படும் ஷாக்கிங் மாற்றம்

0
397

சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகளின் படி ஃபிட்னஸ் டிராக்கர்கள், பெடோமீட்டர்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்சுகள் ஆகியவை உடற்பயிற்சி செய்யவும், உடல் எடையை குறைக்கவும் தூண்டுவதாக கண்டறியப்பட்டுள்ளது. நவீன யுகத்தில் அனைத்தையும் கச்சிதமாக செய்து முடிக்க எலக்ட்ரி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் நமக்கு கைக்கொடுக்கின்றன. வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர், மைக்ரோவேவ் ஓவன், வாக்யூம் கிளீனர் உள்ளிட்டவற்றைப் போலவே, ஃபிட்னஸ் டிராக்கர்கள், பெடோமீட்டர்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்சுகள் ஆகியவை நாம் அன்றாட பயன்படுத்தும் பொருட்களாக மாறிவிட்டன. இதற்கு முன்னதாக கூட பலரது உயிரும் கூட ஸ்மார்ட் வாட்சு அணிந்திருந்ததால் காப்பாற்றப்பட்டதாக செய்திகள் மூலம் அறிந்திருப்போம்.

உடல் நலத்தின் மீது அக்கறை இருக்க வேண்டியது தான் அதற்காக இப்படி ஆயிரக்கணக்கில் செலவு செய்து ஸ்மார்ட் வாட்ச் போன்றவற்றை அணிய வேண்டுமா? என்ற கேள்வி பலருக்கும் எழுவது உண்டு. இந்நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவின் படி, ஃபிட்னஸ் டிராக்கர்கள், பெடோமீட்டர்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்கள் அதிக உடற்பயிற்சி செய்யவும் உடல் எடையை குறைக்கவும் தூண்டுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின் முடிவு, லான்செட் டிஜிட்டல் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வின் படி, அணியக்கூடிய ஆக்டிவிட்டி டிராக்கர்கள் அதனை அணிந்திருப்பவர்களை அதிகமாக உடற்பயிற்சி செய்ய தூண்டுவதாகவும், அது உடல் எடையை இழக்க பயனுள்ளதாக அமைவதாகவும் தெரிவித்துள்ளது.

உடற்பயிற்சியின்மை என்பது தொற்று நோய், இருதய நோய், பக்கவாதம், வகை 2 நீரிழிவு, புற்றுநோய் மற்றும் மனநோய் உள்ளிட்ட பல உடல் நலக்கோளாறுகள் உருவாக காரணமாக அமைகிறது. எனவே உடற்பயிற்சியை ஊக்குவிப்பது தொடர்பாக நிபுணர்கள் பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கிட்டத்தட்ட 100க்கும் அதிகமான ஆய்வுகளை மதிப்பாய்வு செய்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள 1,64,000 பேருக்கு ஆக்டிவிட்டி டிராக்கர்களை அணிவித்து அவர்களின் உடல் செயல்பாடுகளை கண்காணித்துள்ளனர். இதன் மூலம் அணியக்கூடிய ஆக்டிவிட்டி டிராக்கர்கள் ஒவ்வொன்றும் தினந்தோறும் நம்மை 40 நிமிடங்கள் அதிகமாக நடக்க தூண்டுவதாகவும், இதன் விளைவாக ஐந்து மாதங்களில் சராசரியாக 1 கிலோ வரை கூடுதலாக உடல் எடை குறைவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

முன்னணி ஆராய்ச்சியாளரும், UniSA PhD ஸ்காலருமான டை பெர்குசன் கூறுகையில், “நாங்கள் மதிப்பாய்வு செய்த ஆய்வுகளின் ஒட்டுமொத்த முடிவுகள் அணிக்கூடிய ஆக்டிவிட்டி டிராக்கர்கள் செயல்பாட்டை தூண்டுவதை காட்டுகின்றன. டிராக்கர்கள் எல்லா வயதினருக்கும் மற்றும் நீண்ட காலத்திற்கு பயனுள்ளதாக உள்ளது. அவைகள் வழக்கமான அடிப்படையில் உடற்பயிற்சி செய்ய மக்களை ஊக்குவிக்கிறது, அதை அவர்களின் வழக்கமான பகுதியாக மாற்றவும் மற்றும் எடை இழக்க இலக்குகளை அடையவும் உதவுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.இது ஒரு எடை குறைப்பு தொடர்பான ஆய்வு கிடையாது என்றும், வாழ்க்கை முறை மற்றும் உடல் நலம் சார்ந்தது என விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். எனவே ஒரு கிலோ எடை குறைப்பு என்பது மக்களுக்கு சாதாரணமானதாக தோன்றினாலும், செயல் திறன் அடிப்படையில் டிராக்கர்கள் பலன் கொடுக்ககூடியவை என்பதை நிரூபித்துள்ளது.

மதிப்பாய்வின் இணை ஆசிரியரான, பேராசிரியர் கரோல் மஹர் கூறுகையில், “சராசரியாக ஒரு நபர் ஆண்டுக்கு 0.5 கிலோ உடல் எடையை அதிகரிக்கிறார். அப்படி இருக்கையில் 5 மாதங்களில் ஒரு கிலோ வரை உடல் எடையை குறைப்பது என்பது சிறப்பானது. குறிப்பாக ஆஸ்திரேலியர்களில் மூன்றில் இரண்டு பங்கு நபர்கள் அதிக எடை அல்லது பருமனாக இருக்கும் போது இந்த முடிவுகள் பலனளிக்க கூடியவையாகவே இருக்கும்” என தெரிவித்துள்ளார்.2014 முதல் 2020 வரையிலான ஆண்டுகளில் உலகளவில் அணியக்கூடிய ஆக்டிவிட்டி டிராக்கர்களின் பயன்பாடு எண்ணிக்கை கிட்டத்தட்ட 1500 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2020ம் ஆண்டு கணக்கின் படி 2.8 பில்லியன் டாலர்கள் வரை ஆக்டிவிட்டி டிராக்கர்களின் விற்பனை செய்யப்பட்டுள்ளது.ஸ்மார்ட் வாட்கள் கூடுதல் உடற்பயிற்சி, எடை இழப்புக்கு மட்டுமின்றி ரத்த அழுத்தத்தைக் குறைப்பது, டைப் 2 டயாபெட்டீஸ் மற்றும் கொலஸ்ட்ரால் போன்றவற்றைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மேலும் உடல் செயல்பாடு அதிகரிப்பதன் மூலமாக மனச்சோர்வு மற்றும் பதற்றம் குறைவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Previous articleபணம் புகழை பார்த்துவிட்டேன்… அதில் சந்தோஷம் நிம்மதி இல்லை – நடிகர் ரஜினிகாந்த்
Next articleகுரங்கம்மை நோயை சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவித்த உலக சுகாதார அமைப்பு