சிட்னியில் மாயமான காதலியை, எங்கிருந்தாலும் திரும்பி வருமாறு முறையிட்ட காதலன் கொலை வழக்கில் கைதாகியுள்ளார்.
சிட்னியில் இந்தியவம்சாவளி ஷெரீன் குமாரின் சடலம் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து, 37 வயதான வின்சென்ட் கார்லினோ என்பவர் கைது செய்யப்பட்டார்.
புதன்கிழமை மாலை மாயமான நிலையில் நேற்று ஷெரீன் மற்றும் கார்லினோ தம்பதி வசித்து வந்த குடியிருப்பில் இருந்து சிறிது தூரத்தில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஷெரீன் குமார் கொலை வழக்கு தொடர்பில் கார்லினோ கைது செய்யப்பட்டார்.
மட்டுமின்றி, தமது காதலி மாயமானதில் மனத்துயரத்தில் உள்ளதாகவும், தகவல் தெரியவரும் பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் எனவும் கார்லினோ கோரியிருந்தார்.
குடியிருப்பில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் வெளியே சென்ற ஷெரீன் குமார் மீண்டும் குடியிருப்புக்கு திரும்பவில்லை என்றே கார்லினோ தெரிவித்திருந்தார்.
43 வயதான ஷெரீன் குமாரின் பிள்ளைகள் அவரது முன்னாள் கணவரின் கவனிப்பில் உள்ளனர். பிரபல மொடலாகவும் நாய் தொடர்பான தொழில் செய்து வருபவருமான ஷெரீன் குமார் கொலை செய்யப்பட்டுள்ளது அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது.
விரிவான விசாரணைக்கு பின்னரே, இந்த வழக்கின் பின்னணி தெரியவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.