உக்ரைன் தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் 100 பேர் கொன்று குவிப்பு

0
407

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் நாளுக்கு நாள் தீவிரமாகிக்கொண்டே செல்கிறது. கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் முன்னேற்றம் கண்டு வரும் அதே வேளையில், கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் ரஷ்ய படைகளின் வசம் உள்ள நகரங்களை மீட்பதில் உக்ரைன் ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது. நேற்று முன்தினம் கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒலெனிவ்கா நகரில் உள்ள சிறைச்சாலை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதில் அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த 53 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த தாக்குதலை உக்ரைன் ராணுவம் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டிய நிலையில் அதை திட்டவட்டமாக மறுத்துள்ள உக்ரைன் தரப்பு, போர் குற்றங்கள் குறித்த ஆதாரங்களை அழிப்பதற்காக ரஷ்யாவே இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் சிறைச்சாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து ஐ.நா. சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் விசாரணை நடத்த வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் போரில் ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்ட முதல் உக்ரைன் நகரமான கெர்சானில் நேற்று முன்தினம் உக்ரைன் ராணுவம் கடுமையான தாக்குதல் நடத்தியது. அந்த நகரில் உள்ள ரஷ்ய ராணுவ நிலைகளை குறிவைத்து தொடர்ச்சியாக பீரங்கி மற்றும் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டதாகவும், 7 ராணுவ பீரங்கி வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது. எனினும் இது குறித்து ரஷ்யா உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதனிடையே உக்ரைனின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ், ஸ்லோவியன்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களில் பள்ளிக்கூடம், பஸ் நிலையம் போன்ற பொது உள்கட்டமைப்புகள் மீது ரஷ்ய படைகள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியது.

Previous articleToongabbie kids world
Next articleRathika Jewellers and pawnbrokers