இப்போது இருப்பது புதின் இல்லையா அவரது டூப்பா…?

0
261

ரஷிய அதிபர் புதினின் உடல்நிலை குறித்து சமீபத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அவர் புற்றுநோயால் அவதிப்படுவதாக கூறப்பட்டது. பிறநாட்டு தலைவர்களுடனான சந்திப்பின் போது, புதினின் கை, கால்களில் நடுக்கம் இருந்தன என்று ஊடகங்கள் தெரிவித்தன. இதேபோல் புதின், தன்னை போன்று உருவம் கொண்ட நபர் பொது வெளியில் உலாவ விடுவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதனை ரஷியா திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் புதினை போன்றே தோற்றம் கொண்ட போலி நபர் உலாவி வருவதாக உக்ரைன் நாட்டு உளவுத்துறை பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. உக்ரைனின் உளவுத்துறை தலைவர் கைரிலோ புடானோவ் ஒருதொலைக் காட்சியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புதினின் சமீபத்திய தோற்றங்களில் அவரது உயரமும், காதுகளும் மாறி உள்ளன. அவரது புகைப் படங்களில் ஒவ்வொன்றிலும் காதுகள் வித்தியாசமானதாக இருக்கிறது. ஒவ்வொரு நபரின் காதும் தனித்துவமானது. அது ஒரு கைரேகை போன்றது. அதை மீண்டும் செய்ய முடியாது. புதினை போன்று வேறு ஒரு நபரை பயன்படுத்தி வருகிறார்கள். சமீப காலங்களில், புதின் பொது வெளியில் தோன்றிய போது வெவ்வேறான பழக்க வழங்கங்கள், வித்தியாசமான நடத்தைகள், வித்தியாசமான நடைகள், நன்கு கூர்ந்து கவனித்தால் வெவ்வேறு உயரங்களை நீங்கள் பார்க்கலாம்.

கடந்த மாதம் ஈரானுக்கு சென்று அந்நாட்டு அதிபர் மற்றும் துருக்கி அதிபரை சந்திக்க புதினின் போலி நபர் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். நான் ஒரு குறிப்பை மட்டும் கொடுப்பேன். ஈரானின் தெக்ரானில், புதின் விமானத்தில் இருந்து கீழே இறங்குவதை பாருங்கள். அது புதினா? என்பதை பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார். அதே போல் உக்ரைன் வட்டாரங்கள் கூறும்போது, தெக்ரானில் விமானத்தில் இருந்து கீழே இறங்கியபோது புதின் வழக்கத்துக்கு மாறாக விரைந்து நடந்து சென்றதாக தெரிவித்துள்ளது. புதின் பற்றிய உக்ரைனின் உளவுத்துறை தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Previous articleஆஸ்திரேலியாவில் சில இணையதளங்களை அணுக தடை!
Next articleசிங்கப்பூரிலேயே அடுத்த 14 நாட்கள் தங்க கோத்தபய ராஜபக்சே முடிவு?