
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் மார்-ஏ-லாகோவில் உள்ள வீட்டில் FBI சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியது. புளோரிடாவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக அமெரிக்க முன்னாள் அதிபர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். “இது நம் நாட்டிற்கு மோசமான நேரம், புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள மார்-ஏ-லாகோவில் உள்ள எனது அழகான வீடு பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனின் ஒரு பெரிய குழுவால் சுற்றி வளைக்கப்பட்டு, சோதனையிடப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார். முன்னாள் அதிபர் யாருக்கும் இது போல் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப் அதிபராக இருந்த போது வெள்ளைமாளிகையில் காணாமல் போன ஆவணங்கள் தொடர்பாக இந்த அதிரடி ரெய்டு நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு டிரம்ப் அலுவலகத்தைக் காலி செய்த போது பல ஆவணங்களையும் காலி செய்ததாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.இதில் ரகசியக் காப்பு ஆவணங்கள் உட்பட 15 பெட்டிகளில் ஆவணங்கள் காணாமல் போயின அல்லது ட்ரம்ப் சட்ட விரோதமாக அவற்றை அகற்றியதாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ரெய்டு நடக்கும் போது மார்-ஏ-லாகோ வீட்டில் ட்ரம்ப் இல்லை. ரெய்டு குறித்து ஆவேசமாகப் பேசிய ட்ரம்ப், 2024 அதிபர் தேர்தலில் நான் அதிபர் பதவிக்குப் போட்டியிடக்கூடாது என்பதில் ஆளும் கட்சியினர் குறியாக உள்ளனர், குடியரசு மற்றும் பாரம்பரியக் கட்சியினருக்கு களங்கம் கற்பிக்குமாறு ‘தீவிர இடது ஜனநாயகவாதிகள்’ சதி செய்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய தயாராகி வரும் நிலையில் அவரது வீட்டில் FBI சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆவணங்களை மறைத்ததற்காக அகற்றியதற்காக ட்ரம்ப் மீது குற்ற விசாரணை நடத்த அமெரிக்க நீதித்துறை ஆயத்தமாகி வருகிறது.