இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இது, அரசியல் களத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள் வெடித்ததால் பிரதமர் மஹிந்த ராஜப்கசே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து அதிபர் பதவியில் இருந்த கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்க தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில்,எரிபொருள் உற்பத்தி, இறக்குமதி, விநியோக சங்கிலியை சரிசெய்ய பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு முயற்சியாக, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான இலங்கை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (LOCL – இலங்கை ஓசிஎல்) நிறுவனத்துக்கு கூடுதலாக 50 எரிபொருள் நிலையங்களை திறக்க செய்வதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.
இலங்கை ஓசிஎல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனோஜ் குப்தா இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ” இலங்கையில் ஏற்கனவே 216 எரிபொருள் நிலையங்கள் செயல்படுத்தி வருகிறோம். விரிவாக்க பணிகளில் 5.5 மில்லியன் டாலர் மதிப்பில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.இலங்கை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கை ஓசிஎல் நிறுவனம் அந்நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் முக்கிய பங்குதாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு திருகோணமலை எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை இலங்கையுடன் இணைந்து உருவாக்க கடந்த 30 ஆண்டுகளாக இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. தொடர் எதிர்ப்பால் செயல்படுத்த முடியாத நிலையில், கடந்த ஜனவரி மாதம் இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, ரின்கோ பெட்ரோலியம் டர்மினல் பிரைவட் லிமிட்டட் என்ற பெயரில் இலங்கை ஓசிஎல் மற்றும் இலங்கையின் இலங்கை பெட்ரோலிய நிறுவனனமும் இணைந்து அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.இந்த சூழலில், இலங்கை- ஓசிஎல் நிறுவனத்துக்கு மேலும் 50 எரிபொருள் விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி வழங்கியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.