இலங்கையில் மின் கட்டணத்தை 264 சதவீதம் உயர்த்த மின்சார வாரியம் முடிவு! பொதுமக்கள் அதிர்ச்சி

0
303

இலங்கையில் வரலாறு காணத அளவாக, மின்கட்டணத்தை 264 சதவீதம் உயர்த்த அந்நாட்டு மின்சார வாரியம் முடிவெடுத்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில், இதுவரை இல்லாத அளவாக இந்த விலை உயர்வு உள்ளது. இந்த மின் கட்டண உயர்வானது, மிகவும் குறைந்த அளவில் மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு அதிக சிரமத்தையும், அதே வேளையில் அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு குறைந்த அளவில் விலை உயர்வு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. எண்ணெய் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, தற்போது நஷ்டத்தில் இயங்கி வரும் சிலோன் மின்சார வாரியம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. மின்வாரியத்தை லாபமாக்க, முயற்சியாக மின்கட்டணங்களை 800 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதை நிராகரித்த அரசு, அதிகபட்சமாக 264 சதவீதத்திற்கு உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.புதன்கிழமை முதல் மின் கட்டண உயர்வு அமலாக உள்ளது.

இந்த அதிரடி உயர்வால் இலங்கையில் வாழும் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகுவார்கள். அவர்கள் சராசரியாக ஒரு மாதத்திற்கு 90 கிலோ வாட் மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர். இந்த நடவடிக்கையால் அவர்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணம் பன்மடங்கு உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் மாதாந்திரம் அதிக மின்சாரத்தை உபயோகப்படுத்துபவர்கள் செலுத்த வேண்டிய கட்டண உயர்வு அதிகபட்சம் 80 சதவீதம் கூடுதலாக செலுத்த வேண்டி வரும். மின்வாரியத்தின் இந்த நடவடிக்கையால், ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2.5 என வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், இனிமேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.8 வசூலிக்கப்படும். அதிகமாக மின்சாரம் உபயோகப்படுத்துவோர், தற்போது யூனிட் ஒன்றுக்கு ரூ.45 செலுத்தி வரும் நிலையில், அவர்கள் யூனிட்டுக்கு இனிமேல் ரூ.75 செலுத்த வேண்டி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 யூனிட்டுகளுக்குக் கீழே (அதிகபட்சமாக ரூ.198 வரை) பயன்படுத்தும் நுகர்வோருக்கு, இனி 264 சதவீதம் கட்டண உயர்வு அமலாகும். 30 யூனிட் முதல் 60 யூனிட் வரை (அதிகபட்சமாக ரூ.599 வரை) பயன்படுத்தும் நுகர்வோருக்கு, இனி 211 சதவீதம் கட்டண உயர்வு அமலாகும். 60 முதல் 90 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு, 125 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleகாலநிலை மாற்றத்தால் மோசமடையும் தொற்று நோய்கள்- ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
Next articleவிக்ரமின் கோப்ரா வெளியீட்டு தேதி அறிவிப்பு