சீனாவின் அதி தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் தொடர்ந்தும் இலங்கை நோக்கி பயணித்து வருகின்றது.
வேகத்தை அதிகரித்துக்கொண்டு ஹம்பாந்தோட்டை நோக்கி அந்தக் கப்பல் பயணித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி நாளைய தினத்தில் இது ஹம்பாந்தோட்டையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கப்பலின் வருகையை தாமதப்படுத்தமாறு இலங்கை அதிகாரிகள் சீனாவுக்கு அறிவித்துள்ள போதும், அதனையும் கடந்து கப்பல் வேகமாக இலங்கை நோக்கி பயணிக்கின்றது.
செய்மதிகள் மற்றும் ஏவுகணைகளை கண்காணிக்க முடியுமான வசதிகள் கொண்ட சீனாவின் Yuan Wang 5 கப்பல் இன்று பிற்பகல் இலங்கையில் இருந்து 680 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்தது. மணித்தியாலத்திற்கு 14 கடல் மைல் வேகத்தில் அந்நேரத்தில் கப்பல் பயணித்துக்கொண்டிருந்தது. இதற்கு முன்னர் இந்த கப்பல் மணித்தியாலத்திற்கு 10 முதல் 13 கடல் மைல் வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தது.
தமது பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் நிலவுவதாக தெரிவித்து சீனாவின் இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பயணிப்பதை இந்தியா கடுமையாக எதிர்த்ததுடன் இந்த கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு நேற்று வௌிவிவகார அமைச்சு சீனாவிற்கு அறிவித்திருந்தது.
எனினும் அந்தக் கப்பல் குறித்த தினத்தில் இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.