எகிப்து நாட்டில் உள்ள புகழ்பெற்ற தேவாலயம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்து கடும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து தலைநகர் கைரோ அருகே உள்ள கிரெட்டர் கைரோ மாவட்டத்தில் கோப்டிக் கிறிஸ்து சர்ச் என்ற தேவாலயம் உள்ளது.இந்த தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு திருப்பள்ளி நிகழ்வு நடைபெற்றது. இந்த வழிபாட்டு நிகழ்வின் போது அங்கு ஏற்பட்ட திடீர் தீவிபத்து அங்கு குழுமியிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தீ மளமளவென பரவியதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு மக்கள் முந்தியடித்துக்கொண்டு வெளியேற முயற்சித்தனர்.
பலர் தேவாலயத்தின் உள்ளே தீ வெப்பத்திலும், புகையிலும் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்க அந்நாட்டின் பேரிடர் துறை சம்பவயிடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டது. தொடர்ந்து தீயணைப்பு துறையினர் பல மணிநேரம் போராடி தீயை அனைத்தனர். இந்த கோர தீவிபத்தில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்ததாக எகிப்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 18 குழந்தைகளும் அடக்கம்.மேலும், 14 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு எகிப்து நாட்டின் அதிபர் அப்தேல் பட்டாஹ் அல் சிசி தனது பேஸ்புக் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் எனக் கூறியுள்ள அதிபர் விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடைபெறும் எனவும் உறுதியளித்துள்ளார்.இந்த விபத்திற்கு மின்கசிவே காரணம் என முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. மின்தடை காரணமாக அங்கு ஜெனரேட்டர் உபயோகிக்கப்பட்ட நிலையில், மின்சாரம் வந்ததும் ஓவர்லோட் ஆகி இந்த விபத்து ஏற்பட்டது என எகிப்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.