
சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள பிரலாபமான ஐகியா ஷோரூமில் கொரோனா கட்டுப்பாட்டிலிருந்து தப்பிக்க மக்கள் அலறியடித்து ஓடும் வீடியோ இணையத்தில் பெருமளவு பகிரப்பட்டு வருகிறது. ஐகியா ஷோரூம் அமைத்துள்ள பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் உடனடி கட்டுப்பாடு நடவடிக்கையாக ஐகியா கடையை உள்ளே இருந்த மக்களோடு மூடி தனிமைப் படுத்த கொரோனா கட்டுப்பாடு குழு முயற்சித்துள்ளது. உடனே பயந்த மக்கள் கடையிலிருந்து தப்பி வெளியில் ஓடி வருகின்றனர். இந்த சம்பவம் இணையத்தில் வீடியோவாக பகிரப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தைக் குறித்து ஷாங்காய் சுகாதார ஆணையத்தின் துணை இயக்குனர் ஜாவோ தண்டன் தெரிவிக்கையில் ஐகியா ஷோரூம் மற்றும் பாதிக்கப்பட்ட சுற்று வட்டார பகுதி இரண்டு நாட்களுக்கு கொரோனா கட்டுப்பாடு காரணமாக மூடிவைக்கப்படும். மேலும் அங்கு இருந்த மக்கள் இரண்டு நாட்களுக்கு அரசு கட்டுப்பாடு நிலையங்களில் தனிமைப்படுத்தப்படுவர். அவர்களின் உடல் நலம் 5 நாட்களுக்குக் கண்காணிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
ஷாங்காய் பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு கொரோனா பரவலின் காரணத்தினால் ஊரடங்கு கொண்டுவரப்பட்டு மக்கள் பெரும் அவதி அடைத்தனர். தற்போது மீண்டும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் பூஜ்ய கொரோனா கொள்கையின் படி பெரியளவிலான கொரோனா சோதனை, பாதிக்கப்பட்டவர் மற்றும் பகுதிகளை முழுமையாகத் தனிமைப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்று கடந்த வாரம் சுற்றுலாத் தலமான ஹைனன் தீவில் 80,000 சுற்றுலாப் பயணிகளை கொரோனா கட்டுப்பாடு காரணமாகச் சீனா அரசு முடக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.