ஹம்பாந்தோட்டை துறைமுக பகுதியில் சீன ஆய்வுக் கப்பல் நங்கூரமிட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவின் இராமேஸ்வரம் கடலில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் இராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதியில் தாழ்வாக பறந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
மண்டபம் பகுதியில் இந்திய கடலோர காவல் படைகள் முகாம்கள் அமைத்து இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்நிய ஊடுருவலை கண்காணிப்பதற்காகவே சர்வதேச கடல் எல்லையில் ஹெலிகாப்டர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்பு உயர் அதிகாரி குறிப்பிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மேலும் இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீன தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் ஒன்று இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளதால், இந்திய கடற்படை கண்காணிப்பை அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்தக் கப்பல் தொடர்பில் இலங்கை எடுத்த தீர்மானத்தை, கடும் அழுத்தங்களைக் கொடுத்து சீனா மாற்றியுள்ளதாக ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் சீனா இலங்கைக்கு அதிக அழுத்தங்களை கொடுத்ததாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.