ஒரே நாளில் 2 ஏவுகணைகளை சோதித்து வடகொரியா அடாவடி

0
328

வடகொரியாவை அணுஆயுதமற்ற நாடாக மாற்ற வேண்டுமென அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனால் தங்கள் நாட்டின் மீதான பொருளாதார தடைகளை முழுமையாக திரும்ப பெறாத வரை அணு ஆயுதங்களை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்பதில் வடகொரியா உறுதியாக உள்ளது. இது மட்டும் இன்றி பொருளாதார தடைகளை திரும்பப்பெறுவதற்கு அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வடகொரியா அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது. இந்த நிலையில் வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தயாராகும் வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் படைகள் கொரிய தீபகற்பத்தில் அடுத்த வாரம் மிகப்பெரிய கூட்டுப்போர் பயிற்சியை தொடங்க இருப்பதாக இருநாடுகளும் நேற்று முன்தினம் அறிவித்தன. இந்த நிலையில் வடகொரியா நேற்று ஒரே நாளில் 2 ஏவுகணைகளை ஏவி சோதித்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இது குறித்து தென்கொரியா ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைநகர் பியாங்யாங் அருகே மேற்கு கடலில் இருந்து 2 கப்பல் ஏவுகணைகளை ஏவியதை கண்டறிந்தோம். இந்த சோதனை குறித்த கூடுதல் விவரங்களை அமெரிக்கா மற்றும் தென்கொரிய அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்” என கூறப்பட்டுள்ளது. தென்கொரியாவின் அதிபராக யூன் சுக் யோல் பதவியேற்று நேற்றுடன் 100 நாட்கள் நிறைவைடைந்த நிலையில், வடகொரியா நேற்று ஏவுகணை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Previous article10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றால் ரூ 13. லட்சம் பரிசு – ரஷியா அறிவிப்பு
Next articleஅடுத்த வாரம் இலங்கை திரும்புகிறார் கோத்தபய ராஜபக்சே