‘மக்களே தயவு செஞ்சு குடிங்க’.. கோரிக்கை வைக்கும் ஜப்பான் அரசு

0
410

ஜப்பான் நாட்டு மக்களிடையே மது அருந்தும் பழக்கம் குறைந்திருப்பதால் வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே மது அருந்தும் பழக்கத்தை அதிகப்படுத்தக் கடுமையான முயற்சிகளை ஜப்பான் அரசாங்கம் எடுத்து வருகிறது.சேக் விவா என்ற பிரச்சாரத்தையும் ஜப்பான் அரசாங்கத்தின் தேசிய வரி நிர்வாகம் தொடங்கியுள்ளது. அதன் படி 20 வயதிலிருந்து 39 வயதுள்ள ஜப்பானியர்களிடம் நாட்டு மக்களிடையே குடிப்பழக்கத்தை அதிகரிக்க என்ன செய்யலாம் என அரசாங்கம் சார்பில் யோசனைகள் கேட்கப்பட்டுள்ளன.

சிறந்த யோசனைகளை வழங்குபவர்களுக்குப் பரிசு மற்றும் விருது வழங்கி கவுரவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி செப்டம்பர் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.கொரோனாவிற்கு பின்பு மாறிய வாழ்க்கைமுறை காரணமாகவே ஜப்பானில் மதுக் குடிக்கும் பழக்கம் குறைந்துள்ளது. அதற்கு முன்னரே படிப்படியாக ஜப்பான் மக்களிடையே இருந்த குடிப்பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வந்தது. 1995-ம் ஆண்டு காலகட்டத்தில் ஜப்பானில் சராசரியாக ஒரு வருடத்திற்கு ஒரு நபர் 100 லிட்டர் மது அருந்திவந்துள்ளார். அதுவே 2020-ம் ஆண்டு ஒரு நபர் வெறும் 75 லிட்டர் மட்டுமே மது அருந்தும் அளவுக்குக் குறைந்துள்ளது.

2011- ம் ஆண்டு ஜப்பானின் வரி வருவாயில் 3% சதவீதம் மது விற்பனையிலிருந்து வந்துள்ளது. அது 2020-ம் ஆண்டு 1.7% சதவீதமாக மாறியுள்ளது. இதனால் பல நூறு கோடிகள் நஷ்டம் ஜப்பான் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முன்பு வரை சக ஊழியர்கள் மற்றும் சக வியாபாரிகளிடம் உள்ள உறவை மேம்படுத்தப் பெரும்பாலானோர் வெளியில் சென்று ஒன்றாக மது அருந்தி வந்தனர்.கொரோனாவிற்கு பின்பு வீட்டிலிருந்தே பணிபுரியும் வொர்க் புரம் ஹோம் வழக்கம் அதிகமாகியுள்ளதால் வெளியில் சென்று மது அருந்துவது தேவையா என்று எல்லோரும் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் ஏற்கெனவே குறைந்து வரும் வரி வருவாயில் இது மேலும் தலைவலியாக மாறிவிடும் என அரசாங்கம் அஞ்சுகிறது.

Previous articleமதுபோதையில் நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட பின்லாந்து பிரதமர்
Next articleஇலங்கையில் ஒவ்வொரு குடிமகனும் 10 லட்சம் ரூபா கடன்! மத்திய வங்கி அறிவிப்பு