கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை, வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களை செலுத்த முடியமல் திவால் நிலையை அறிவித்தது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால் இறக்குமதி செய்ய போதிய பணம் இன்றி தவிக்கும் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களும் தட்டுப்பாடும் நிலவுகிறது. இதனால், பெரும் மக்கள் கிளர்ச்சி வெடித்தது. ராஜபக்சே சகோதரர்கள் அதிகாரத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். தற்போது இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே உள்ளார். இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க பல கட்ட முயற்சிகளை ரணில் விக்ரமசிங்கே அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு செல்கிறது.ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதிகளில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் குழு செல்ல உள்ளது. பொருளாதார, கடன் மறுசீரமைப்பு மற்றும் கொள்கைகள் தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.