ஜப்பானில் உச்சம் தொட்ட கொரோனா.. ஒரே மாதத்தில் 60 லட்சம் பேருக்கு பாதிப்பு

0
399

ஜப்பானில் 7-வது கோவிட்-19 அலை உச்சத்தை தொட்டுள்ளது. அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 2,61,29 பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை ஏற்பட்ட அதிகபட்ச தினசரி பாதிப்பு இதுவே.நேற்று ஒரே நாளில் 294 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,000 நெருங்கியுள்ளது.

ஜப்பான் நாட்டில் கொரோனா தொற்று தற்போது 7-வது அலையாக பரவியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 60 லட்சம் பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டின் சுகாதார கட்டமைப்பே ஆட்டம் கண்டுள்ளது. தொற்று பாதிப்புக்கு ஆளான 15 லட்சம் பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தியுள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் கவலைக்குரிய நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைகள் முழுவதும் நிரம்பிவிட்டன.

ஆகஸ்ட் 8 முதல் 14ஆம் தேதி என்ற ஒரு வார காலத்தில் மட்டும் 13,95,301 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தென்கொரியா மற்றும் அமெரிக்காவில் தான் ஒரே வாரத்தில் 13 லட்சம் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஜப்பானில் தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு மாணவர்கள் வீடு திரும்புவதால், இந்த பரவல் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என ஜப்பான் அரசு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஜப்பான் தீவிரப்படுத்தியுள்ளது. அந்நாட்டில் 31% பேர் நான்கு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மேலும், 12 முதல் 40 வயதுக்குப்பட்டோரில் 30 சதவீதம் பேர் தான் 3ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். எனவே, இவர்களுக்கு 3ஆவது டோஸ் முழுமையாக செலுத்துவதில் சுகாதாரத்துறை கவனம் செலுத்தி வருகிறது.

ஜப்பானைப் போலவே மற்றொரு கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவிலும் கொரோனா புதிய அலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் நாள்தோறும் 1.5 லட்சம் புதிய பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. அந்நாட்டில் புதிய கோவிட்-19 அலை ஏற்பட்டுள்ளதா என தென் கொரிய அரசு கண்காணித்து வருகிறது. அதேபோல், ஒமைக்ரான் போல் வேறு ஏதேனும் உருமாறிய தொற்று பரவல் உள்ளதா எனவும் சுகாதாரத்துறை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.

Previous article37,000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் தூங்கிய விமானிகள்
Next articleமும்பை தாக்குதல் மீண்டும் நிகழ்த்தப்படும் – வாட்ஸ் அப்பில் இந்தியாவிற்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்