அமெரிக்கக் கடலோரக் காவல்படைக் கப்பலுக்குத் தென் பசிபிக் நாடான சாலமன் (Solomon) தீவுகளில் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கக் கப்பல் தனது துறைமுகத்தில் நிற்பதற்கு சாலமன் தீவுகள் மறுத்துள்ளது. தென் பசிபிக் நாடுகளிடையே சீனாவின் ஆதிக்கம் வளர்ந்து வருவது குறித்த கவலை அதிகரிக்கும் வேளையில் அந்தச் சம்பவம் நடந்துள்ளது.
ஒலிவியர் ஹென்ரி (Oliver Henry) என்ற அந்த அமெரிக்கக் கப்பல் எண்ணெயையும் உணவுப் பொருள்களையும் நிரப்புவதற்கு அனுமதி கேட்டபோது சாலமன் தீவுகள் மறுத்துவிட்டது.
Stars and Stripes ராணுவ ஏடு அந்தத் தகவலை வெளியிட்டது. சாலமன் தீவுகள் அரசாங்கம் அந்தச் செய்தி குறித்து கருத்து சொல்லவில்லை. அண்மையில் சீனாவும் சாலமன் தீவுகள் அரசாங்கமும் பாதுகாப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டன. சாலமன் தீவுகள் நூற்றுக்கணக்கான தீவுகளைக் கொண்ட தென்பசிபிக் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.