Newsபுலம்பெயர் இலங்கையர்களா, புலம்பெயர் தமிழர்களா?

புலம்பெயர் இலங்கையர்களா, புலம்பெயர் தமிழர்களா?

-

புலம்பெயர் தமிழர்கள் என்பது தற்போது புலம்பெயர் இலங்கையர் (Sri Lankan Diaspora) என்று இலங்கை ஒற்றையாட்சி அரசினால் மிக நுட்பமாக (Very subtle) மடைமாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. லண்டனில் ரணில் விக்கிரமசிங்க தமிழ்ப் புலம்பெயர் பிரதிநிதிகளைச் சந்தித்தாரா இல்லையா என்று தெரியாது. ஆனாலும் தமிழ் அமைப்புகளையும் சேர்த்தே சிங்கள – ஆங்கில ஊடகங்கள் புலம்பெயர் இலங்கையர்கள் என்று சித்தரிக்கின்றன.

ஆகவே ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்களில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்குபற்றினார்களா இல்லையா என்பதைப் புலம்பெயர் அமைப்புகள் உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவை லண்டனில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகள் சந்திப்பதற்கு வாய்ப்புகள் இருந்ததாகத் தெரியவில்லை.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் லண்டனுக்கு வருகை தந்து ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்திருக்கவும் வாய்ப்பில்லை.

ஏனெனில் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள் (Sri Lanka’s Unitary Constitution) நின்று கொண்டு வடக்குக் கிழக்கு அபிவிருத்தியை மாத்திரமே ரணில் விக்கிரமசிங்க பேசுகிறார்.

இதனால் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை மற்றும் நிரந்தர அரசியல் தீர்வின்றிப் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ரணிலை லண்டனில் சந்தித்திருக்கச் சந்தர்ப்பம் இல்லையெனலாம். சர்வதேச நீதியைத்தான் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் அழுத்தம் திருத்தமாகவும் முன்வைக்கின்றன.

இருந்தாலும் சில தமிழ்ப் பிரதிநிதிகள் மற்றும் தனி நபர்கள் சந்தித்ததாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

இதனாலேயே சிங்கள – ஆங்கில ஊடகங்கள் புலம்பெயர் இலங்கையரை ரணில் சந்தித்துள்ளார் என்ற செய்திக்குள் தமிழ் அமைப்புகளும் பங்குபற்றியிருந்தன என்ற ஒரு தொனியை வெளிப்படுத்தியுள்ளன.

அதாவது தமிழர்களும் தங்களை இலங்கையர்களாக அதாவது இலங்கைத் தேசியம் (Sri Lankan Nationalism) என்ற கோட்பாட்டுக்குள் வாழவும், இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பையும், அதன் கீழ் அமையவுள்ள யாப்புத் திருத்தங்களை மாத்திரம் ஏற்றுக் கொண்டும் வாழத் தயார் என்ற பொய்யான ஒரு பரப்புரை வெளிப்பட்டுள்ளது.

2009 இற்குப் பின்னரான சூழலில் ஈழத் தமிழர் விவகாரத்தில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் என்பது மிக முக்கியமான ஒன்று. ஆனால் அந்தத் தமிழ் அமைப்புகளை மிக இலகுவாக இலங்கையர்கள் என்றும், ரணில் விக்கிரமசிங்க சந்தித்ததன் ஊடாக இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான நிதியுதவிகள் உள்ளிட்ட அனைத்தையும் அவர்கள் செய்யத் தயார் எனவும் செய்திகள் புனையப்படுகின்றன.

இலங்கை ஒற்றையாட்சி அரசினால் புலம்பெயர் அமைப்புகள். சில தனி நபா்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டதன் பின்னணியிலேயே இவ்வாறான கதைகள் கசியவிடப்படுகின்றன. அதாவது இலங்கையின் தடை நீக்கம் என்பது புலம்பெயர் அமைப்புகளுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்ற மாயை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது.

இலங்கை ஒற்றையாட்சியின் சட்டதிட்டங்களையும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மதித்துச் செயற்பட வேண்டுமென்ற அழுத்தங்களும் மறைமுகமாக ஊட்டப்பட்டிருக்கின்றன.

அதுமாத்திரமல்ல ஜெனீவா மனித உரிமைச் சபை வரையும் இந்த விடயம் கசிய விடப்பட்டுள்ளது. அதாவது பொருளாதார நெருக்கடியின் பின்னரான சூழலில், ஈழத் தமிழர்கள் இலங்கையர்களாக வாழத் தயார் என்ற கதை ஒன்று, சிங்கள இராஜதந்திரிகளினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

இப் பின்புலத்திலேயே ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளரின் பூச்சிய வரைபில் கூட, இலங்கையில் ஏப்ரல் மாதம் இடம்பெற்ற பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டங்களில் தமிழ் மக்களும் சிங்கள மக்களுடன் சேர்ந்து பங்குபற்றியதாகவும் இது சிறந்த எடுத்துக் காட்டு எனவும் குறிப்பிடப்பட்டுப் பாராட்டும் தொிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் இலங்கையர்களாக ஒன்றிணைந்து வாழ இணங்கி வருகின்றனர் என்ற ஒரு பொய்யான பரப்புரைத் தொனி ஆணையாளரின் அறிக்கையில் இருந்து மறைமுகமாக வெளிப்படுவதை அவதானிக்க முடியும்.

அந்தக் கருத்தை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கிலேயே புலம்பெயர் இலங்கையர்களை ரணில் விக்கிரமசிங்க சந்தித்ததாகச் சிங்கள – ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

அதாவது இனிமேல் போர்க்குற்ற மற்றும் இன அழிப்பு விசாரணைக்கான சர்வதேச சிறப்பு நீதிமன்றக் கோரிக்கைகள் எதுவும் தமிழர்களிடம் இருந்து எழக்கூடாது என்ற தங்களுடைய விருப்பங்களைக் கன கச்சிதமாகச் சிங்கள ஆட்சியாளர்கள் காய் நகா்த்தி வருகின்றனர் என்பது இங்கே கண்கூடு.

இதற்குச் சர்வதேச மட்டத்தில் சரியான பதில் கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு உண்டு. இல்லையேல் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்பட ஆரம்பித்துள்ளன என்ற தவறான கற்பிதம், சர்வதேச அரங்கில் நியாயப்பட்டு விடும்.

ஆகவே புலம்பெயர் தமிழர்கள் இலங்கையர்கள் அல்ல. புலம்பெயர் தமிழர்கள் என்ற சொல் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான சூழலில், ஈழத்தமிழ் மக்களின் பிரதான அரசியல் கோரிக்கைகள் நுட்பமாக மடைமாற்றம் செய்யப்படுவதை வடக்குக் கிழக்கில் உள்ள தமிழ் சிவில் சமூக அமைப்புகள் புரிந்துகொள்ளவும் வேண்டும்.
2015 இல் மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் இனப்பிரச்சினை என்ற சொல் நல்லிணக்கமாகவும், போரக்குற்ற வி்சாரணை என்பது ஒட்டு மொத்த இலங்கை மக்களின் மனித உரிமை மீறல்களாகவும், 2019 ஏப்ரலில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர், ஒட்டுமொத்த இலங்கை மக்களின் நடமாடும் சுதந்திரத்துக்கான பாதுகாப்புப் பிரச்சினையாகவும், 2022 மார்ச் மாதத்தில் இருந்து இலங்கையின் பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் ஜனநாயகத்துக்கான போராட்டமாகவும் மடை மாற்றம் செய்யப்பட்டிருப்பதைத் தமிழர்கள் புரிந்துகொள்வது அவசியம்.

அத்தோடு வடக்குக் கிழக்குப் பிரச்சினை என்பது தனியே வடமாகாணப் பிரச்சினையாக மடை மாற்றம் செய்யப்பட்டதும் 2015 மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் என்பதையும் அறிந்துகொள்ளவும் வேண்டும்.

அதேவேளை, ஈழத்தமிழர்கள் என்று நேரடியாகவே விழித்துத் தமிழில் கூறி வரும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் எவரும் Eelam Tamils என்று ஆங்கிலத்தில் பேசும்போது சொல்வதில்லை.

பேசுகின்ற இடங்களைப் பொறுத்துத் தேவை ஏற்படும்போது மாத்திரம், வடக்குக் கிழக்குத் (North East Tamils) என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள்.

ஆனால் Eelam Tamils என்று ஆங்கிலத்தில் சொல்வதைத் தவிர்த்து வருகின்றனர்.

ஒரு நாடு இரு தேசம் என்று அடிக்கடி மார் தட்டி வந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூடத் தற்போது இலங்கைத்தீவு பல தேசங்களைக் கொண்ட நாடு என்று சித்தரிக்கிறார். ஆனால் Eelam Tamils என்று ஆங்கிலத்தில் உரையாற்றும் போது சொல்வதில்லை. தமிழில் பேசும்போது மாத்திரம் ஈழத்தமிழர்கள் என்று கூறுகிறார்.

Eelam Tamils என்று ஆங்கிலத்தில் கூறி, அதனைத் தமிழர்களின் மரபுரீதியான மொழிப் பிரயோகமாவும் அடையாளமாகவும் சர்வதேச அரங்கில் நிறுவத் தயங்குகின்றனர்.

ஆகவே இப்படியான தயக்கம் – குழப்பம் தமிழ்த் தேசியக் கட்சித் தலைவா்களிடம் இருக்கும் நிலையில் புலம்பெயர் இலங்கையர் (Sri Lankan Diaspora) என்றும், இலங்கைத் தமிழர்கள் (Sri Lankan Tamils) எனவும் இலங்கை அரசாங்கம் மிக இலகுவாக மடைமாற்றம் செய்துவிடும் என்பது வெளிப்படை.

ஈழம் என்ற சொல் இலங்கை அரசாங்கத்தின் முன்னைய தமிழ்ப் பாடநூல்களில்கூட உண்டு.

எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்குகளில் பங்குகொள்ள லண்டனுக்குச் சென்றிருந்த ரணில் விக்கிரமசிங்க. அங்கு பல சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...