சர்வதேச அளவில் உள்ள நிறுவனங்களில் பணி நீக்கம் என்பது விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் நிலையில், இருக்கும் வேலை என்னவாகுமோ என்ற கவலையே ஊழியர்கள் மத்தியில் பெரும்பாலும் இருந்து வருகின்றது.
ஆஸ்திரேலியா நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்துள்ளது. கிறிஸ்துமஸ் போனஸ் ஆக $100,000 கொடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Roy Hill என்ற நிறுவனத்தினை Gina Rinehart என்ற பெண் நடத்தி வருகின்றார்.
கடந்த சில ஆண்டுகளாக நல்ல வளர்ச்சி கண்டு வரும் Roy Hill, கணிசமான லாபத்தினையும் கொடுத்து வந்துள்ளது. இதற்கிடையில் தன்னுடன் பணியாற்றும் 10 ஊழியர்களுக்கு, ஒவ்வொருவருக்கும் $100,000 போனஸ் ஆக கொடுத்துள்ளார் ஜினா ரைன்ஹார்ட்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டினை ஒட்டி இந்த அறிவிப்பு வந்துள்ள நிலையில், இது ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட 10 ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் வாரி வழங்கியுள்ளார் இந்த பெண் தொழிலதிபர். கடந்த ஆண்டில் Roy Hill நிறுவனம் இந்த சவாலான காலகட்டத்திலும் 3.3 பில்லியன் டாலர் லாபம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
உலகின் டெக் ஜாம்பவான்கள் ஆன ஆப்பிள்,மைக்ரோசாப்ட், மெட்டா, ட்விட்டர், சிஸ்கோ என பல நிறுவனங்களும், மந்த நிலையை காரணம் காட்டி பணி நீக்கம் செய்து வருகின்றன. செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. பல நிறுவனங்களும் புதிய பணியமர்த்தலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
ஆனால் Roy Hill ஜாம்பவான்களுக்கெல்லாம் சவால் விடும் வகையில், ஊழியர்களுக்கு போனஸினை வாரி வழங்கியுள்ளது. இது மற்ற நிறுவனங்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.