நாக்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளான நேற்று, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய ஆவுஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 177 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ஆவுஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியை 36 ரன்களுக்கு அவுட்டாக்கினார்.
இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய 450-வது விக்கெட் ஆகும். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள், 450 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர், முதல் ஆசிய வீரர் என்கிற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.
உலக அளவில் விரைவாக 450 விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் வரிசையில், இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். அவர் 80 போட்டிகளில் 450 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்த நிலையில், அஸ்வின் 89 போட்டிகளில் 450 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்திய அளவில் முன்னாள் வீரர் அணில் கும்ளே 619 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இருப்பினும் அவர் 93 போட்டிகளில் 450 விக்கெட்டுகளை எடுத்த நிலையில், அஸ்வின் இந்த சாதனையை 89 போட்டிகளிலேயே எடுத்து அசத்தியுள்ளார்.
நன்றி தமிழன்