மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா அடுத்த மாதம் 6 ஆம் திகதி, லண்டனில் கோலாகலமாக நடைபெறுகின்றது.
இதில் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றது.
இந்த முடிசூட்டும் விழாவில் மறைந்த ராணியும், தனது மாமியாருமான இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தைத்தான், ராணி கமீலா பார்க்கர் அணிவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதை அவர் அணியப்போவதில்லை என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்த கிரீடத்துக்கு பதிலாக ராணி மேரி அணிந்திருந்த கிரீடத்தைத்தான் ராணி கமீலா பார்க்கர் அணியப்போகிறார் என உறுதியாகி இருக்கின்றது.
இந்த கோஹினூர் வைரம், இந்தியாவில் பிரிக்கப்படாத ஆந்திர மாநிலத்தில், கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாகும்.
இதன் எடை 105.6 கேரட். இந்த வைரத்தை சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங் வைத்திருந்தார் என்றும், அது 1857 ஆம் ஆண்டு நடந்த கிளர்ச்சிக்குப் பின்னர் விக்டோரியா மகாராணிக்கு வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.
இந்தியாவுக்கு சொந்தமான இந்த வைரத்தை இங்கு மீட்டுக்கொண்டு வர வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்தது. ஆனால், இந்த வைரத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என இங்கிலாந்து திட்டவட்டமாக அறிவித்து விட்டது.
ஆனாலும் சர்ச்சை இன்னும் முடிந்தபாடில்லை. இந்த நிலையில்தான் ராணி கமீலா பார்க்கர், இந்த வைரம் பதித்த கிரீடத்தை அணிவதைத் தவிர்த்துள்ளார்.