உலகில் அதிக ஆபத்தான விலங்குகளில் ஒன்றாகக் கருதப்படும் முதலை தாக்குதலால் மிக மோசமான சம்பவம் வடக்கு குயின்ஸ்லாந்தில் நடந்துள்ளது.
முதலைகள் நிறைந்த நீரில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போன ஒருவர் இரண்டு நாட்களுக்குப் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதுவும் முழு உடலும் மீட்கப்படவில்லை. உடலின் பாகங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.
அங்கே முதலை தாக்குதலால் உயிரிழந்த இந்த நபர் கெவின் டார்மோடி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். 65 வயதான அவர், சனிக்கிழமையன்று வடக்கு குயின்ஸ்லாந்தில் ஒரு பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். மீன்பிடிக்க ஆரம்பித்த உடன் முதலை ஒன்று வந்த நிலையில், அதை அவர் விரட்டியடித்ததாகக் கூறப்படுகிறது.
முதலையை விரட்டியடிக்க அவர் சத்தமாகக் கத்தியுள்ளார். மேலும், தண்ணீரில் தொடர் அலைகளையும் உருவாக்கியுள்ளார். இதனால் முதலை அங்கிருந்து சென்றுவிட்டது.
அந்த குழு அதன் பின்னர் வழக்கம் போல மீன்பிடித்த நிலையில், அவர் எதிர்பாராத விதமாக மாயமாகியுள்ளார். எங்குத் தேடியும் அவரை கண்டறிய முடியவில்லை. இதையடுத்து போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும் அவரை தேடியுள்ளனர்.
இப்படியே இரண்டு நாட்களுக்குத் தேடுதல் வேட்டை நடந்துள்ளது. அப்போது அங்கே இரண்டு முதலைகள் ஏதோ ஒன்றைத் தின்று கொண்டிருந்ததை ரேஞ்சர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 4.2 மீட்டர் (14 அடி) மற்றும் மற்றொன்று 2.8 மீட்டர் (ஒன்பது அடி) இரு முதலைகளைச் சுட்டுக் கொன்றனர்.
இதையடுத்து அங்கே இருந்த எச்சங்களை ஆய்வு செய்த போது, அவை மனித எச்சங்கள் என்பது தெரிய வந்தது. இது உண்மையாகவே மிகவும் சோகமான நிகழ்வு என்றே ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு குயின்ஸ்லாந்தின் கிராமப்புற நகரமான லாராவைச் சேர்ந்த அந்த நபரின் மறைவால் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளதாம்.