Newsடைட்டானிக் கப்பலை சுற்றி இத்தனை ஆபத்துகளா?

டைட்டானிக் கப்பலை சுற்றி இத்தனை ஆபத்துகளா?

-

டைட்டானிக் கப்பலை தேடிச் சென்ற ‘டைட்டன் நீர்மூழ்கியின்’ உள்ளிருந்தே வெடிப்பு நிகழ்ந்து விபத்திற்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்துள்ளது. அதில் பயணித்த 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.

கடலின் மேற்பரப்பிலிருந்து 4000 மீட்டர் ஆழத்திற்குச் செல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அங்கே பல அசம்பாவிதங்கள் நடக்கலாம்.

மிகக் குறிப்பாக டைட்டானிக் கப்பலின் சிதைவுகள், அட்லாண்டிக் பெருங்கடலில் 3800 மீட்டர் ஆழத்தில் பொதிந்து கிடக்கின்றன. அத்தனை பெரிய ஆழத்திற்குள் சூரிய ஒளிகளால் ஊடுருவ முடியாது. இதனால் இப்பகுதியை ‘midnight zone’ என்று அழைக்கின்றனர்.

ஆனால் டைட்டானிக் சிதைவுகள் இருக்கும் பகுதிக்குச் செல்வதில் இருள் மட்டுமே சவாலாக இருக்கிறது என்று கூற முடியாது. காரிருளையும் விட பயங்கரமான ஆபத்துகள் அங்கு இன்னும் என்னென்ன இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

கடந்த 1911ஆம் ஆண்டு, கிரீன்லாந்தின் தென்மேற்குப் பகுதியில் இருந்த பெரிய பனிப்பாறையிலிருந்து, ஒரு பெரிய பனிக்கட்டி உடைந்து மிதக்கத் துவங்கியது. அது மெதுவாக தெற்கே நகர்ந்து படிப்படியாகக் கரைந்தது.

ஓராண்டிற்குப் பிறகு, சௌதாம்ப்டன் நகரிலிருந்து, நியூயோர்க் நோக்கி தனது பயணத்தைத் துவங்கியிருந்த டைட்டானிக் கப்பல் அவ்வழியாக வந்துகொண்டிருந்தது.

அப்போது கிரீன்லாந்திலிருந்து உடைந்த பனிப்பாறையில் எஞ்சியிருந்த பகுதிகள் அனைத்தும் இந்த டைட்டானிக் கப்பல் மீது மோதின.

நிலவு இல்லாத ஒரு கடும்குளிர் இரவில் 1912ஆம் ஆண்டு, ஏப்ரல் 14ஆம் தேதி இந்த விபத்து நேர்ந்தது. டைட்டானிக் கப்பல் மீது மோதிய அந்தப் பனிப்பாறையின் அளவு சுமார் 1600அடி இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டது.

விபத்து நேர்ந்த 3 மணி நேரத்திற்குள், டைட்டானிக் கப்பல் முழுவதுமாக கடலுக்குள் மூழ்கியது. அப்போது கப்பலில் 1500 பயணிகள் இருந்தனர்.

இந்த பிரமாண்ட டைட்டானிக் கப்பல், தற்போது கடலின் அடி ஆழத்திற்குள் பொதிந்து கிடக்கிறது. கடலின் மேற்பரப்பிலிருந்து சுமார் 3.8கிமீ ஆழத்தில் டைட்டானிக்கின் சிதலங்கள் இருக்கின்றன. டைட்டானிக்கின் இந்த சிதலமடைந்த பகுதிகள் கனடாவின் நியூஃபவுன்ட்லாண்ட் கடற்கரையிலிருந்து 640கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

அங்கே இருக்கும் பனிப்பாறைகள், இன்றும் கப்பல் போக்குவரத்திற்கு ஆபத்து விளைவிக்கின்றன. 2019ஆம் ஆண்டில், மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்களில் 1,515 பனிப்பாறைகள் தெற்கே அட்லாண்டிக் கடற்பகுதியில் நுழைவதற்குப் போதுமான அளவு நகர்ந்துள்ளன.

ஆனால் இது எல்லாவற்றையும்விட, தற்போது டைட்டானிக் கப்பல் சிதைந்து கிடக்கும் பகுதியே பெரும் ஆபத்தான பகுதியாக மாறியுள்ளது. அதாவது உலகின் மிகப்பெரும் கப்பல் விபத்தாகக் கருதப்படும் டைட்டானிக் விபத்தே, தற்போது மற்ற கப்பல் போக்குவரத்துக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

ஓஷன்கேட் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘டைட்டன் நீர்மூழ்கி’, அதில் பயணித்த 5 பேருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனது.

இதற்கான தேடுதல் பணிகள் நடந்து வந்த நிலையில், வியாழனன்று அமெரிக்காவின் கடலோர காவல் படை, டைட்டன் நீர்மூழ்கி விபத்திற்குள்ளானதாக அறிவித்துள்ளது.

‘ஆளில்லாத ரோபோடிக் நீர்மூழ்கி, டைட்டனின் சிதறிய பாகங்களை நீருக்கடியில் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்க கடலோர காவல் படையினர் கூறினர்.

‘டைட்டன் நீர்மூழ்கி வெடித்துச் சிதறியுள்ளது என்றும், டைட்டானிக் தளத்தைச் சுற்றியுள்ள குப்பைகளுக்கு மத்தியில் டைட்டன் நீர்மூழ்கியின் ஐந்து பெரிய துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது நீர்மூழ்கியின் அழுத்த அறை வெடித்திருப்பதைக் காட்டுவதாகவும்” அமெரிக்க கடலோர காவல் படை கூறியுள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்படுமா என்பது குறித்து உறுதியாக எதுவும் கூற முடியாது எனவும் கடலோர படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்குள்ளாகியிருக்கும் இந்தக் கடல் பகுதி எப்படி இருக்கிறது என்பது குறித்து பிபிசி ஊடகம் ஆய்வு செய்தது.

ஆழ்கடல் பயணம் எப்படியிருக்கும்?

பொதுவாகவே ஆழ்கடல் பகுதி மிகவும் இருட்டாகக் காணப்படும். கடலின் மேற்பரப்பில் சூரிய ஒளி தண்ணீரால் வேகமாக உறிஞ்சப்படுகிறது. இதன் காரணமாக சூரிய ஒளியால் 1000 மீட்டர்களுக்கு மேல் ஊடுருவ முடியாது.

இந்தக் குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால், கடலில் அடர் இருள் நிலவும். இதை ‘midnight zone’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள்.

இதற்கு முன்னால் டைட்டானிக் மூழ்கியுள்ள பகுதிக்குப் பயணம் மேற்கொண்டவர்கள், கடலின் ஆழத்தில் இறங்கிய பிறகு அங்கே எப்படியான சூழல் நிலவும் என்பது குறித்து விவரித்துள்ளனர்.

‘இருள் நிறைந்த பகுதிக்குள் நீர்மூழ்கி இறங்கியதும், அதன் விளக்குகள் ஒளிரச் செய்யப்படும். ஆனால் அதன்மூலம் குறிப்பிட்ட தூரம் வரையிலும்தான் நம்மால் பார்க்க முடியும். மேலும் அத்தனை பெரிய ஆழத்தில் எளிதாக வழி மாறவிடவும் அதிகமான வாய்ப்புகள் உள்ளன’’

ஆனால் அதேநேரம், பல ஆண்டுகளாக ஆய்வு செய்யப்பட்டு வரும் டைட்டன் கப்பலின் சிதலமடைந்த கப்பல் குறித்து வழங்கப்பட்டிருக்கும் தெளிவான வரைபடம், அங்கே செல்பவர்களுக்கு ஓரளவு பயனுள்ளதாக இருக்கும்.

அதேபோல் நீர்மூழ்கியைச் சுற்றியுள்ள அம்சங்களையும், பொருட்களையும் கண்டறிய சோனார் கருவி உதவி புரியும்.

ஆழ்கடலுக்குள் பயணிக்கும் கப்பல் பைலட்கள், இயக்க ஊடுருவல் வழிசெலுத்தும் முறை(inertial navigation) என்ற தொழில்நுட்பத்தை நம்பி இருக்கின்றனர். அவர்கள் பயணிக்கும் திசை குறித்து அறியவும், தொடக்க நிலையிலிருந்து அவர்களின் வேகத்தைக் கணித்துக்கொள்ளவும் இது உதவுகிறது.

தற்போது விபத்துக்குள்ளாகியிருக்கும் ‘டைட்டன் நீர்மூழ்கியும்’ இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக ஓஷன்கேட் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் அதில் ஒலியியல் சென்சார்கள் (Acoustic sensor) பொருத்தப்பட்டிருந்ததாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் எத்தனை வசதிகள் இருந்தாலும், கடலின் ஆழத்திற்குள் சென்றுவிட்ட பிறகு, அங்கே சரியான வழிதடங்களைக் கண்டறிவது கடினமாகத்தான் இருந்தது என ‘டைட்டன் நீர்மூழ்கியில்’ பயணம் செய்த முந்தைய பயணிகள் தெரிவித்துள்ளனர்.

கடலின் ஆழத்தில் மாறுபடும் அழுத்தம்

கடலின் ஆழத்திற்கு நாம் செல்லச் செல்ல, அங்கே அழுத்தங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், கடலுக்கு அடியில் 3800மீட்டர் ஆழத்தில் கிடக்கும் டைட்டானிக் சிதலங்கள் இருக்கும் பகுதியில், கடலின் மேற்பரப்பில் இருப்பதைவிட 390 மடங்கு அதிகளவு அழுத்தங்கள் இருக்கும்.

‘இது ஒரு கார் டயரில் இருப்பதைவிட 200 மடங்கு அதிகளவு அழுத்தத்தைக் கொண்டது’ என ராபர்ட் ப்ளைஸ்கி கூறுகிறார். இவர் பெருங்கடல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருபவர்.

’இத்தனை பெரிய அழுத்தங்களைச் சமாளிப்பதற்கு ஏற்ற வகையில், தரமான அடர்த்தியான சுவர்களைக் கொண்ட நீர்மூழ்கிகளைப் பயன்படுத்த வேண்டும்’ எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

‘கார்பன் மற்றும் டைட்டானியத்தால் உருவாக்கப்பட்ட டைட்டன் நீர்மூழ்கியின் சுவர்கள், 4000 அடி ஆழத்திலும் உள்ள அழுத்தங்களை சமாளிக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

நீரோட்டங்கள் ஏற்படுத்தும் தாக்கம்

பொதுவாகவே கடலின் மேற்பரப்பில் உள்ள நீரோட்டங்கள் குறித்து நாம் நன்கு அறிந்திருப்போம். படகுகளையும், நீரில் நீந்தும் மனிதர்களையும் தூக்கி எறியக்கூடிய வகையில் வலுவான நீரோட்டங்களைக்கூட நாம் பார்த்திருப்போம்.

கடலின் ஆழத்தில் இருக்கும் நீரோட்டங்கள், மேற்பரப்பில் காணப்படும் அளவிற்கு வலிமையானதாக இல்லை என்றாலும் கூட, அவை பெரிய அளவிலான நீரின் இயக்கத்தை உள்ளடக்கியிருக்கும்.

காற்று, அலை மற்றும் நீரின் அடர்த்தியில் உள்ள வேறுபாடுகளால், வலுவான நீரோட்டங்களில் அங்கே மாறுபாடுகள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில், கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பல் பகுதியில் நிலவும் நீரோட்டங்கள் குறித்து சில தகவல்கள் தெரிய வருகின்றன.

கடலில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பல் இரண்டு பாகமாகப் பிளந்து கிடக்கிறது. சிதைந்து கிடக்கும் அதன் வடிவங்கள் மற்றும் அதைச் சுற்றி இருக்கும் ஸ்குவிட்களின் (Squid) இயக்கத்தின் மூலம் அந்தப் பகுதியில் உள்ள நீரோட்டங்கள் குறித்துத் தெரிய வந்துள்ளன.

மேற்கு எல்லைப் பகுதியிலிருந்து தெற்கு நோக்கிப் பாயும் குளிர்ந்த நீரோட்டங்களுக்கு இடையில் டைட்டானிக்கின் சில பாகங்கள் காணப்படுகின்றன. இதை ‘Under current’ எனக் குறிப்பிடுகின்றனர்.

அதேபோல், கடலின் அடிப்பகுதியில் உள்ள வண்டல்கள், ’சிற்றலைகள், இடம்பெயர்ந்த குன்றுகள் மற்றும் ரிப்பன் போன்ற சுழல்களையும் உருவாக்குகிறது. இதை ‘கடலடி நீரோட்டம் (Bottom Current)’ என்று குறிப்பிடுகின்றனர்.

ஆனால் டைட்டானிக்கின் முக்கிய சிதிலங்கள் இருக்கும் பகுதியில், நீரோட்டங்கள் வடமேற்கிலிருந்து, தென்மேற்கு நோக்கிப் பாய்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். டைட்டானிக் சிதிலங்களின் மிகப்பெரிய பாகங்கள் நீரோட்டத்தின் திசையை மாற்றுவதால் இந்த வேறுபாடு இருக்கலாம் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் இந்த நீரோட்டங்களின் தொடர் இயக்கம், காலப்போக்கில் டைட்டானிக் பாகங்களை கடல் மண்ணில் புதைத்து விடும் எனப் பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அந்த அளவு இந்த நீரோட்டங்களின் தாக்கம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

“அதேநேரம் இந்த நீரோட்டங்கள் அவ்வளவு ஆபத்தானது அல்ல என்றும், ஒரு நீர்முழ்கியைத் தாக்கும் அளவிற்கு அவை சக்தி வாய்ந்தவை அல்ல என்றும்” ஜெர்ஷார்ட் சீஃபர்ட் கூறுகிறார்.

இவர் ஓர் ஆழ்கடல் தொல்லியலாளர். டைட்டானிக் சிதைவுகளை உயர்தர தெளிவுதிறனில் காட்சிப்படுத்துவதற்காகச் சென்ற ஆழ்கடல் பயணத்திற்கு இவர் தலைமை தாங்கினார்.

‘எங்கள் பயணத்தில், இந்த நீரோட்டங்கள் டைட்டானிக்கை மேப்பிங் செய்வதில் சவாலாக இருந்ததே தவிர, எந்த வகையிலும் பாதுகாப்பிற்கு ஆபத்தானதாக இருக்கவில்லை’ என்று அவர் குறிப்பிடுகிறார்.

வண்டல்களும் சிதைவுகளும்

கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக கடலின் தரைப்பகுதியில் கிடந்ததால், டைட்டானிக் கப்பல் துருப்பிடித்துச் சிதற ஆரம்பித்துவிட்டது.

இதன் காரணமாக ஒரு நீர்மூழ்கிக் கப்பல் அதற்கு அருகில் போனால், அது சிதிலங்களின் மீது மோதக்கூடும் அல்லது அவற்றில் சிக்கிக்கொள்ளக்கூடும்.

அதேபோல கடந்த 40 ஆண்டுகளில், டைட்டானிக் சிதைவுகளின் மீதுள்ள பாக்டீரியாக்கள் அதிகரித்திருப்பதாகவும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதனால் ஏற்படும் அரிப்புகள் காரணமாக, டைட்டானிக் சிதைவுகள் மேலும் மோசமடைந்து வருவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதேபோல், கடலுக்கு அடியில் கிடக்கும் வண்டல் மண் பாய்ச்சல்களினாலும் அங்கே சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது மிகவும் அரிதாக நடக்கக்கூடிய நிகழ்வு என்றாலும், கடந்த காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

பூகம்பங்கள், நில அதிர்வுகள் நிகழும் நேரங்களில், இந்த வண்டல் மண் பாய்ச்சல் தூண்டப்படுகிறது.

இந்த நிலையில், டைட்டானிக் கப்பலை சுற்றியுள்ள நிலப்பரப்பு கடந்த காலங்களில், நீருக்கடியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் தாக்கப்பட்டிருக்கும் அறிகுறிகளைக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கு முந்தைய பேரழிவு நிகழ்வுகள், அங்கே 100 மீட்டர் தடிமன் அளவிற்கு வண்டல் மண் அடுக்குகளை உருவாக்கியுள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இது மிக அரிதாகவே நடக்கும் நிகழ்வு என மற்றொரு தரப்பின் வாதம் முன்வைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

டைட்டானிக் சிதைவுகள் இருக்கும் இடத்தைச் சுற்றியுள்ள புவியியல் அம்சங்கள் குறித்து இன்னும் முழுமையாக ஆராய்ச்சிகள் செய்யப்படவில்லை. அதனால் தற்போது ஏற்பட்டிருக்கும் டைட்டன் நீர்மூழ்கியின் விபத்திற்கான காரணம் குறித்து உறுதியாக எதுவும் சொல்ல முடியாது.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...