தெற்கு ஆஸ்திரேலிய இளம் பெண் ஒருவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாநிலத்தின் voluntary assisted dying laws- துன்பமற்ற மரணத்திற்கு உதவுதல் சட்டங்களைப் பயன்படுத்தி உயிர்துறந்துள்ளார்.
தெற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 23 வயதான Lily Thai என்ற பெண், Ehlers-Danlos Syndrome, Autoimmune autonomic ganglionopathy போன்ற குணப்படுத்த முடியாத நோய்நிலைமைகளின் காரணமாக தனது வாழ்நாளின் பல வருடங்களை வலியுடன் கழித்திருந்த பின்னணியில், துன்பமற்ற மரணத்திற்கு உதவுதல் அதாவது கருணைக்கொலைச் சட்டங்களைப் பயன்படுத்தி கடந்த புதன்கிழமை உயிர்துறந்தார்.
இனிமேலும் வலியைப் பொறுக்கமுடியாது என்பதால் தெற்கு ஆஸ்திரேலியாவின் கருணைக்கொலைச் சட்டங்களைப் பயன்படுத்த திட்டமிட்டதாகவும், நோயினால் தான் அனுபவித்த துன்பங்களிலிருந்து விடுபட ஆவலுடன் காத்திருப்பதாகவும் அந்த இளம் பெண் தெரிவித்திருந்தார்.
தனது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு இது எவ்வளவு கடினமாக இருக்கும் என்று தனக்குத் தெரியும் என்றபோதிலும், எது சரியானது என்பதைத் தேர்ந்தெடுக்கும் நேரம் இதுவெனவும், தான் அமைதியாக இறக்க வேண்டும் என்பதே தனது தெரிவு எனவும் அவர் கூறினார்.
Lily Thai, நடப்பது சாப்பிடுவது உட்பட எந்தவொரு செயலையும் தானாகச் செய்ய முடியாதநிலையில், மற்றவர்களை நம்பியே வாழ வேண்டியிருந்ததாகவும், 17 வயதிலிருந்து கடந்த 6 வருடங்களாக அதிகளவான நாட்களை மருத்துவமனையிலேயே கழித்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.