ஆலயங்களை மையப்படுத்தி தமிழ் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் ஐயமிட்டுன் அமைப்பின ஸ்தாபகர் திரு. முரளிதரன் அவர்களின் எண்ணக்கருவில், மாத்தளை சிந்தாக்கட்டி குமரப்பெருமான் ஆலய தர்மகர்த்தா திரு. பாலசுப்பிரமணியம் அவர்களின் பெருமுயற்சியில், மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் மாத்தளை மாவட்டத்தின் மூன்றாவது மற்றும் மாத்தளை ஆலய கட்டமைப்புக்குள் முதலாவது மின்வழிக்கற்கை நிலையம் (Digital Education Centre) கடந்த 03/07/2023 ஆம் திகதி மாத்தளை சிந்தாக்கட்டி குமரப்பெருமான் ஆலயத்தில் ஐயமிட்டுன் ஸ்தாபகர் திரு. முரளிதரன் அவர்களால் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.
இப்பிரதேசத்தினை அண்டி வாழும் தமிழ் மாணவர்களின் சமய கற்கை மட்டுமன்றி கணித, விஞ்ஞான மற்றும் ஆங்கில கற்கை தேர்ச்சியையும் இந்த மின்வழிக்கற்கை உறுதி செய்யும். இது மின்வழிக்கற்கை நிலையமாக மாத்திரம் அல்லாமல் விழுமியங்கள் மற்றும் தொழில் கற்கைகளை வழங்கும் கேந்திர நிலையமாகவும் செயற்படவுள்ளது.
மேலும் இந்த நிகழ்வில் ஐயமிட்டுன் ஸ்தாபகர் திரு. முரளிதரன் அவர்களால் புதிய பாலர் பாடசாலை ஒன்றிற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. எதிர்காலத்தில் இது ஒரு SMART பாலர் பாடசாலையாக அமையவுள்ளது.
இந்த நிலையத்தின் தொழில்நுட்ப, கண்காணிப்பு, முகாமைத்துவ மற்றும் அறிவு வள தேவைகளை மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் மேற்கொள்ளவுள்ளது. இந்த நிகழ்வில் மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் சார்பாக தலைமை ஆலோசகர் Dr. சுமணேந்திரன், இயக்குனர் திரு. ரவிசங்கர் மற்றும் ஆலோசகர் திரு. சுந்தரலிங்கம் அவர்கள், அங்கத்தவர்கள் திரு. நிரோஷன் மற்றும் திரு. ரிதுர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டனர்.




