சுமார் 70 ஆண்டுகளுக்குப் பின், பிரித்தானிய வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ இருக்கிறது. இனி மன்னர் பெயரால் பிரித்தானிய பாஸ்போர்ட்கள் வழங்கப்பட உள்ளன.
1952ஆம் ஆண்டு வரை, மன்னர் ஆறாம் ஜார்ஜ் அரசாண்டதால், பிரித்தானிய பாஸ்போர்ட்கள் மன்னர் பெயரால் வழங்கப்பட்டுவந்தன.
அவர் மரணமடைந்ததும் ராணி இரண்டாம் எலிசபெத் பதவியேற்க, அப்போதிலிருந்து சுமார் 70 ஆண்டுகளாக, மகாராணியார் பெயரில்தான் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுவருகின்றன.
தற்போது தன் தாயாரின் மறைவைத் தொடர்ந்து சார்லஸ் மன்னராகியுள்ளதால், மீண்டும் பாஸ்போர்ட்கள் மன்னர் பெயரால் வழங்கப்பட உள்ளன.
பாஸ்போர்ட்டின் முதல் பக்கத்தில் ’Her Majesty’ என்னும் வார்த்தைகளுக்கு பதிலாக இனி ‘His Majesty’ என்னும் வார்த்தைகள் இடம்பிடிக்கும்.
ஆனால், மன்னர் சார்லசுக்கு பாஸ்போர்ட் கிடையாதாம். பாஸ்போர்ட்கள் மன்னர் பெயரால் வழங்கப்படுவதால் அவருக்கு பாஸ்போர்ட் கிடையாது.
ஆகவே, மன்னர் சார்லஸ் வெளிநாடு செல்லும்போது அவர் பாஸ்போர்ட் இல்லாமலே பயணிப்பார்.
புதிய பாஸ்போர்ட்கள் இந்த வாரத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும், ஏற்கனவே மகாராணியார் பெயரால் அச்சடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட்கள் தீர்ந்துபோன பிறகே புதிய பாஸ்போர்ட்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
அதற்கு முக்கிய காரணம், மன்னர் சார்லசுக்கு எதையும் வீணாக்குவது பிடிக்காது.
மேலும், மன்னர் பெயரால் பாஸ்போர்ட்கள் வழங்கப்படப்போகின்றன என்றாலும், ஏற்கனவே மகாராணியார் பெயரால் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்களும் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.