இஸ்ரேல் – பாலஸ்தீன போர் 18ஆவது நாளாகத் தொடர்ந்து வரும் நிலையில், போர் விமானங்கள் மூலமாகத் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது இஸ்ரேல்.
காஸாவில் குறைந்தது 2 மணி நேரமாகத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டது இஸ்ரேல். காஸாவின் மக்கள் திரள் கொண்ட பரபரப்பான சந்தையைத் தகர்த்துள்ளது.
உணவு உள்ளிட்ட பொருள்களுக்கான நெருக்கடி நிலவுகிற நிலையில், எஞ்சியிருக்கும் பொருள்களுக்காக மக்கள் திரளாகச் சேர்கிற சந்தையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலேயே பத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். கட்டிட இடிபாடுகளிடையே இன்னும் பலர் சிக்கியுள்ளனர்.
காஸாவின் தெற்கு பகுதி கான் யூனிஸில், அல்-நாசர் மருத்துவமனைக்கு அருகில் உள்ள நுசைரத் பகுதிதான் தற்போது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. போர் ஆரம்பித்தது முதல் இதே இடத்தில் நடைபெறும் மூன்றாவது தாக்குதல் இது.
தாக்குதலில் காயமடைந்தோருக்கு போதிய சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளால் முடியவில்லை. இறந்தவர்களின் உடல்களை வைக்க போதிய இடமில்லாது மருத்துவமனைக்குள்ளேயே தற்காலிக கூடாரங்கள் அமைத்துள்ளார்கள்.
காஸாவின் தெற்கு பகுதி தாக்கப்படுகிற அதே நேரத்தில், வடக்கு பகுதியில் இன்னும் அதிக பலத்தோடு தாக்குதல் தொடரவுள்ளதாகவும் அங்கிருக்கும் மக்களைப் பாதுகாப்பு காரணத்திற்காக தெற்கு நோக்கி இடம்பெயரச் சொல்லி இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்தப் போரில் பயன்படுத்தும் ஆயுதங்களின் வீரியம் மக்களை அதீதமாக பாதித்துள்ளது. தோல் மெழுகு போல் உரிந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இஸ்ரேல் மீது உலக அமைப்புகள் விசாரணை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுப்பப்பட்டு வருகிறது.
காஸா மட்டுமில்லாது இஸ்ரேலின் ஆதிக்கத்தில் உள்ள மேற்குக் கரை பகுதிகளிலும் இஸ்ரேல் இராணுவத்தின் சோதனையும் கைதுசெய்யப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
நன்றி தமிழன்