காசா பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவியாக கூடுதலாக 15 மில்லியன் டாலர்களை வழங்க ஆஸ்திரேலிய மத்திய அரசு தயாராகி வருகிறது.
வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனுடனான உத்தியோகபூர்வ சந்திப்புக்குப் பின்னர் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இஸ்ரேல் அல்லது பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்தாலும், போர் மோதல்களின் போது பொதுமக்கள் படும் துன்பங்களை எந்த வகையிலும் அங்கீகரிக்க முடியாது என்று பிரதமர் வலியுறுத்தினார்.
இதனால், காசா பகுதி பொதுமக்களுக்கு ஆஸ்திரேலிய மத்திய அரசு வழங்கும் மனிதாபிமான உதவியின் மொத்த தொகை 25 மில்லியன் டாலர்களாக உயரும்.
இந்த நிவாரணங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை மூலம் விநியோகிக்கப்பட உள்ளன.