அவுஸ்திரேலியாவில் நீச்சல் குளங்களில் சிறுவர்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் 03 மடங்கு அதிகரித்துள்ளதாக அண்மைய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக 05 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக ஆபத்தில் உள்ளனர், பெற்றோர்கள் இது குறித்து கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த 20 வருடங்களில் 05 வயதுக்குட்பட்ட 549 சிறுவர்கள் குளம் தொடர்பான நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர், இதில் 222 பேர் 01 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்.
உயிரிழந்த சிறுவர்களில் 89 பேர் வீடுகளுக்குள் உள்ள பாதுகாப்பற்ற குளங்களில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக வீட்டின் அருகாமையில் பாதுகாப்பற்ற குளங்கள் அமைப்பதாலும், பெற்றோரின் கவனக்குறைவாலும் சிறு குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரச உயிர் காக்கும் படையினர் தெரிவிக்கின்றனர்.
கோடை காலமான டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலப்பகுதி குளம் தொடர்பான விபத்துகளின் உச்சக் காலமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், மற்ற மாதங்களுடன் ஒப்பிடுகையில் அந்தக் காலப்பகுதியில் விபத்துக்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகமாகும் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
நீரில் மூழ்கி ஒவ்வொரு வருடமும் சராசரியாக 05 வயதுக்குட்பட்ட 27 குழந்தைகள் இறக்கின்றனர், மேலும் விபத்துகளைக் குறைப்பது குறித்து பெற்றோருக்குக் கற்பிப்பதற்கான திட்டங்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்காக அரச உயிர்காப்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.