Cinemaமக்களின் கண்ணீரில் நனைந்து மண்ணில் சங்கமித்தார் கறுப்பு சூரியன்

மக்களின் கண்ணீரில் நனைந்து மண்ணில் சங்கமித்தார் கறுப்பு சூரியன்

-

சென்னை தீவுத்திடலில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடலுக்கு மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திச் செலுத்தியதோடு, அரசியல் பிரமுகர்களும், திரைப் பிரபலங்களும் விஜயகாந்த் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிச் சென்றார்கள்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5. 55 மணியளவில் இறுதிச் சடங்கு முறைகள் நடைபெற்று மூன்று முறை 72 துப்பாகி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்தின் உடல் இரவு 6.55 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வியாழக்கிழமை காலை காலமானார். அவரது மறைவையடுத்து சில மணி நேரம் சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடல் அங்கிருந்து ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் குவிந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸா் திணறினர். இரவு வரை அங்கே பல பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜய், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திச் சென்றனர். தென் மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும் கூட ரசிகர்கள் வந்திருந்தனர். வரிசையில் நின்றிருந்த சிலர் விஜயகாந்த் தமிழக முதல்வராக வந்திருக்கலாம். மக்கள் அந்த வாய்ப்பை இழந்துவிட்டனர் என்று கூறினர்.

விஜயகாந்த் உடலுக்கு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்த போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததால் நெரிசலில் மக்கள் சிக்கி அவதிக்குள்ளாயினர். இதன் காரணமாக விஜயகாந்தின் உடல் தீவுத்திடல் மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தீவுத்திடலில் சென்னை மாநகராட்சி சார்பில் குடிநீர் வசதி, கழிவறை வசதி என பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மக்கள் அஞ்சலி செலுத்தி சென்று திரும்ப ஏதுவாக பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்திச் செல்கின்றனர். பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடலை கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்ய சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இடத்தில் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்ட விஜயகாந்த் உடலுக்கு நடிகர்கள் விஜய் ஆண்டனி, அருள்நிதி,ஸ்ரீகாந்த், லிவிங்ஸ்டன், ராம்கி, ராதாரவி, சாந்தனு, வாகை சந்திரசேகர், டெல்லி கணேஷ்,எம்.எஸ்.பாஸ்கர், தாமு, இசையமைப்பாளர்கள் தேவா, ஸ்ரீகாந்த் தேவா, இயக்குனர்கள் மிஷ்கின், பாக்யராஜ், சுந்தர் சி, பார்த்திபன், அரசியல் தலைவர்கள், சீமான், ஜி.கே.வாசன், மேயர் பிரியா, அமைச்சர் ரகுபதி, நடிகை குஷ்பூ உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர்கள் விஜய் ஆண்டனி, தீவுத்திடலுக்கு குடும்பத்துடன் வந்த நடிகர் அருள்நிதி இறுதி அஞ்சலி செலுத்தினார். நடிகர் லிவிங்ஸ்டன் கதறி அழுதபடி அஞ்சலி செலுத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வி, சகோதரர் மு.க.தமிழரசு மற்றும் நடிகர் அருள்நிதி ஆகியோர் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அப்போது விஜயகாந்த் மனைவி பிரேமலதாவை முதல்-அமைச்சரின் சகோதரி கட்டியணைத்து ஆறுதல் கூறி தேற்றினார்.இயக்குநர் பாக்யராஜ், நடிகர் சாந்தனு, நடிகை குஷ்பு, இயக்குநர் சுந்தர் சி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது நடிகை குஷ்பு பிரேமலதா விஜயகாந்தை கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இறுதி அஞ்சலி செலுத்தினார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்கள் ஆகியோருக்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார். பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் ரஜினிகாந்த், “விஜயகாந்தின் மறைவு மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. ஒரு முறை பழகினால் விஜயகாந்தின் அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள். விஜயகாந்த் கோபத்துக்கு பின்னால் நியாயமான ஒரு காரணம் இருக்கும். விஜயகாந்த் தைரியத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமானவர். விஜயகாந்த் நட்புக்கு இலக்கணமானவர், சுயநலமில்லாதவர்.கேப்டன் என்பது விஜயகாந்துக்கு பொருத்தமான பெயர். விஜயகாந்தின் சொல்லுக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி; மக்களின் மனதில் நிற்பவர் யார்? விஜயகாந்த் போன்றோர்தான்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நடிகர் ராம்கி செந்தூரப்பூவே படத்தில் விஜயகாந்துடன் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்தார். அந்தப் படத்தில் விஜயகாந்தின் கதாபாத்திரத்துக்கு பெயர் கேப்டன். அதனால் சூட்டிங் ஸ்பாட்டில் அனைவருமே கேப்டன் ஷாட்டுக்கு ரெடியா, கேப்டன் வந்துட்டாரா? என்றுதான் பேசுவோம். கொஞ்ச நாளில் அது அவரது அலுவலகம் வரை நீண்டது. அங்கே அழைப்பு எடுத்து கேப்டன் கிளம்பிட்டாரா எனக் கேட்பார்கள். அந்தப் படம் முடிந்தும் கேப்டன் என்றே அவரை எல்லோரும் வாஞ்சையோடு அழைத்தோம். கேப்டன் பிரபாகரன் படத்துக்குப் பின்னர் அந்தப் பெயர் அவரின் அடையாளமாகிவிட்டது என்றார்.

மத்திய அரசு சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்துக்கு ஆறுதல் கூறினார்.

நடிகர்கள் ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரும் அஞ்சலி செலுத்தி விஜயகாந்த் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இயக்குநர், நடிகர் ரமேஷ் கண்ணா அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்களுடன் பேசி ஆறுதல் கூறினர். விஜயகாந்த் மறைவுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் இரங்கல் தெரிவித்துள்ளார். ”விஜயகாந்தின் புன்சிரிப்பை மறக்க முடியாது. அவர் தனது மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டி தமிழீழ விடுதலை வேட்கைக்கு வடிவம் கொடுத்தவர்” என்று அவர் கூறியுள்ளார்.

சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்ட தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது மனைவி பிரேமலதா, குடும்பத்தினருக்கு செந்தில் தொண்டைமான் ஆறுதல் கூறினார்.

கேப்டன் விஜயகாந்தின் இறுதி சடங்கை காண எல்.ஈ.டி. திரை ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்ட நெரிசலை குறைப்பதற்காக குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உட்பட 200 பேருக்கு மட்டுமே நேரில் காண அனுமதி வழங்கப்பட்டது. உயிரிழந்த நடிகர், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் வெள்ளிக்கிழமை சென்னை தீவுத்திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்நிலையில், விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ. அன்பரசன் அரசு சார்பில் இறுதிச்சடங்கில் பங்கேற்றார்கள். சென்னை தீவுத்திடலில் இருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு விஜயகாந்த் இறுதி ஊர்வலம் தொடங்கியது. தீவுத்திடலில் இருந்து ஈ.வெ.ரா. பெரியார் சாலை வழியாக கோயம்பேடு நோக்கி விஜயகாந்த் இறுதி ஊர்வலம் சென்றதுது. வழிநெடுக மக்கள் பாச தலைவருக்கு கண்ணீர் அஞசலி செலுத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் விஜய பிரபாகரன் கதறி அழுதார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5.55 மணியளவில் இறுதிச் சடங்கு முறைகள் நடைபெற்றது. பின்னர் தமிழக முதல்வர் மு க. ஸ்டாலின், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி. கே. வாசன், பாஜக சார்பில் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் கே. என். நேரு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், மா சுப்பிரமணியம், த.மோ. அன்பரசன், பாராளுமன்ற உறுப்பினர் டி ஆர். பாலு உள்ளிட்ட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் மூன்று முறை வானத்தில் 72 துப்பாகி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்தின் உடல் வெள்ளிக்கிழமை மாலை சரியாக 6.55 நல்லடக்கம் செய்யப்பட்டது.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்ட சந்தனப் பேழையில், ஒரு வாசகம் இடம்பெற்றுள்ளது. விஜயகாந்த் உடலை சுமக்கவிருக்கும் சந்தனப் பேழையில், ‘புரட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்த்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் என்றும், அதனுடன், அவரது பிறந்த திகதி மற்றும் மறைந்த திகதியும் இடம்பெற்றுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

மாணவர்களை கௌரவித்த விக்ரோரியா தமிழ் கலாச்சார கழகம்

விக்ரோரியா தமிழ் கலாச்சார கழகம் வருடா வருடம் VCE பரீட்சையில் தமிழ் பாடம் எடுத்து அதி கூடிய புள்ளிகள் பெற்ற மாணவர்கள் மற்றும் தமிழை பாடமாக...

Branded பொருட்களுக்கு அதிகம் செலவு செய்யும் ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்கள் விலையுயர்ந்த Branded பொருட்களுக்கு ஆண்டுதோறும் செலவழிக்கும் பணத்தின் அளவு அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இவ்வாறு பயன்படுத்தப்படும் பொருட்களில் கைத்தொலைபேசி முன்னணியில் உள்ளதாகவும், அதற்காக செலவிடப்படும்...

நடுவானில் வெடித்துச் சிதறிய Starship ரொக்கெட்

அமெரிக்காவின் SpaceX நிறுவனத்தினுடைய Starship ரொக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது. ரொக்கெட் வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து Gulf of Mexico வழியே செல்லக்கூடிய...

Smart watch அணிபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

Smart watch மற்றும் Fitness Tracker Bands-களில் தோலின் மூலம் உறிஞ்சப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த PFAS இரசாயனங்கள் இருக்கலாம் என ஆய்வில் அதிர்ச்சித் தகவல் ஒன்று...

நடுவானில் வெடித்துச் சிதறிய Starship ரொக்கெட்

அமெரிக்காவின் SpaceX நிறுவனத்தினுடைய Starship ரொக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது. ரொக்கெட் வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து Gulf of Mexico வழியே செல்லக்கூடிய...

Smart watch அணிபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

Smart watch மற்றும் Fitness Tracker Bands-களில் தோலின் மூலம் உறிஞ்சப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த PFAS இரசாயனங்கள் இருக்கலாம் என ஆய்வில் அதிர்ச்சித் தகவல் ஒன்று...