மறைந்த பின்னணி பாடகி பவதாரிணி, அவரது தாய் மற்றும் பாட்டியின் நினைவிடம் அருகே கடந்த 27 திகதி மாலை நல்லடக்கம் செய்யப்பட்டார்.
இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரம் கிராமம், லோயா்கேம்ப்பில் உள்ள முல்லைப் பெரியாற்றங்கரையில் குருவனூத்து பாலம் அருகே இளையராஜா கட்டியுள்ள குருகிருபா வேதபாடசாலை ஆசிரமத்துக்கு பவதாரணியின் உடல் கொண்டு செல்லப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னா், பவதாரணியின் உடல் அவரது தாய் ஜீவாவின் சமாதி அருகே நேற்று 27 மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஏற்கெனவே இளையராஜாவின் தாய் சின்னத்தாயின் சமாதியும் இங்குள்ளமை குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளா் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணி (47) உடல்நலக் குறைவு காரணமாக இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 25 திகதி உயிரிழந்தாா்.
கொழும்பில் இருந்து இளையராஜா, அவரது குடும்பத்தினா் பவதாரணியின் உடலுடன் கடந்த 26 திகதி மதியம் புறப்பட்டு, விமானம் மூலம் சென்னை சென்றடைந்தனா். தியாகராய நகா் முருகேசன் தெருவில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் கடந்த 26 திகதி மாலை 5.30 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பவதாரணியின் உடல் வைக்கப்பட்டது.
பாடகி பவதாரணியின் மறைவு வருத்தம் அளிப்பதாக இளையராஜாவை தொலைபேசியில் தொடா்பு கொண்டு நடிகா் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்தாா். இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மான் உள்ளிட்ட திரையுலகினா் பலரும் பவதாரணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா். இயக்குநா் பாரதிராஜாவும் மிகுந்த வேதனையுடன் இரங்கல் பதிவு செய்துள்ளாா். மகள் பவதாரணியுடன் இளையராஜா உடனிருக்கும் படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிா்ந்து ‘அன்பு மகளே’ என பதிவிட்டுள்ளாா். பவதாரணி குழந்தையாக இருக்கும் போது அவருடன் இளையராஜா இருக்கும் புகைப்படத்தை அவா் உருக்கமாக பகிா்ந்திருந்தார்.
நன்றி தமிழன்