பாலஸ்தீன மக்களின் உயிரிழப்புகள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், காஸா பகுதியில் நடவடிக்கைகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அக்டோபர் 7ஆம் திகதி முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 26,637 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 65,387 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இஸ்ரேலியப் படைகள் மூன்று பக்கங்களிலிருந்தும் “காசா நகர” பகுதிக்குள் நுழைந்து பாலஸ்தீனியர்களை வெளியேறுமாறு அறிவித்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த டிசம்பர் 1 முதல், 1.38 மில்லியன் பாலஸ்தீனியர்கள் தங்கள் பகுதிகளை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் சுமார் 700,000 பேர் 161 தற்காலிக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பாலஸ்தீன மேற்குக் கரையில் உள்ள ஜெனின் நகரில் உள்ள மருத்துவமனைக்குள் மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் என மாறுவேடமிட்டு இஸ்ரேலிய சிறப்புப் படை வீரர்கள் நுழைந்து அங்கிருந்த மூன்று பாலஸ்தீனியர்களைக் கொன்ற சம்பவம் ஒன்று சமீபத்தில் பதிவாகியுள்ளது.
தாக்குதலுக்கு தயாராக இருந்த மூன்று ஹமாஸ் போராளிகளை தங்கள் கமாண்டோக்கள் கொன்றதாக இஸ்ரேல் கூறுகிறது.