அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 7ஆவது இந்தியப் பெருங்கடல் உச்சி மாநாட்டில் இணைந்து கொண்ட இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வொனாக் ஆகியோருக்கும் இடையில் நேற்று இருதரப்பு சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
சந்திப்பின் போது, அமைச்சர் வோங், ஜனாதிபதி விக்கிரமசிங்கவை அன்புடன் வரவேற்றதுடன், உச்சிமாநாட்டில் இலங்கை அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.
கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் வோங், இந்து சமுத்திரப் பிராந்தியம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொள்வதில் தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக காஸா பகுதியில் இடம்பெறும் யுத்தத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்காக இலங்கை மேற்கொண்டுள்ள முதலீடுகள் தொடர்பில் கவனத்தை ஈர்த்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, அத்துறையில் அவுஸ்திரேலிய நிறுவனங்களின் ஈடுபாடு குறித்தும் குறிப்பிட்டிருந்தார்.
கொழும்பு திட்டத்தில் இருந்து இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை பிரதிபலித்த இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினர்.